94
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும வெமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
5இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.

(பி - ம்.) 2 ‘நீர்த்துறைப்படி’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) ஊரின்கட் சிறுபிள்ளைகள் தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட்படியும் பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம்? அவ்வாறே எங்களுக்குப் பெரும ! இனியை; மற்று அதனுடைய அணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம்? அதுபோலப் பெரும! நின்பகைவர்க்கு இன்னாய்-எ - று.

கழாஅலினென்பதற்குக் கழுவப்படுதலாலெனினும் அமையும்.


(கு - ரை.) 1. ஊர்க்குறுமாக்கள்: புறநா. 104 : 2; "ஒலித்தொருங்கீண்டிய வூர்க்குறு மாக்களும்" (மணி. 15 : 59). குறுமாக்கள் : புறநா. 159 : 7; நற். 220 : 4 கலித். 82 : 9; மதுரைக். 461 : மணி. 13 : 40. கழால் - கழுவுதல்.

4. புறநா. 3 : 8.

மு. பாடாண்டிணைத் துறைகளுள், 'இயன்மொழி' என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 29, இளம்.); "ஊர்க்குறுமாக்களென்னும் பாட்டினுள் உவமையாகிய பொருளினை யானையும் கடாமுமென்று இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாலின் நீர்த்துறை படியுமென்னும் அடைகூறி ஊர்க்குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் கடாத்திற்குச் சொல்லாமையின் இதுவும் வேறுபட வந்த உவமத் தோற்றமெனப்பட்டது" (தொல். உவம. சூ. 32, பேர்.)

(94)