(கு - ரை.) 1. ‘கம்பலை என்னும் உரிச்சொல் அரவமாகிய இசைப் பொருண்மை யுணர்த்தும்’ (தொல். உரி. சூ. 53, சே.) 2. இடை - சமயம் ; “தளரிடை யறியுந் தன்மையள்” (மணி. 4 : 98) : “நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க” (சீவக. 1975) 3. நாளவை : புறநா. 29 : 5. “நசையுநர்த் தடையா நன்பெருவாயில், இசையேன் புக்கு” (பொருந. 66-7); “பொருநர்க் காயினும் புலவர்க் காயினும், அருமறை நாவி னந்தணர்க் காயினும், கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன, அடையா வாயிலவ னருங்கடை குறுகி” (சிறுபாண். 203-6); “நும்மில் போல நில்லாது புக்கு”, ‘அருங்கடிவாயி லயிராது புகுமின்’ (மலைபடு. 165, 491); “நசையுநர்க் கடையா நன்பெரு வாயில்” (கூர்ம. சூரியன்மரபு. 13); “தடைஇய வாயி றடையாது நுழைந்து” (தணிகையாறு. 231) 7. ஆனாது ஈதல் :புறநா. 42 : 1. கவிகை-கொடுத்தற்குக் கவிந்த கை; “தேர்வீசு கவிகை” (மலைபடு. 399); “கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கை” (அகநா. 213); பெருங். 4. 10 : 106 - 7. 6 - 7. “மாரி பொய்க்குவ தாயினும், சேர லாதன் பொய்யல னசையே” (பதிற். 18 : 11 - 2.); “நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள”, “வண்மைபோல் வானம் பொழிந்தநீர்” (பரி. 4 : 27, 22 : 8); தளியிற் சிறந்தனை வந்த புலவர்க், களியொடு கைதூ வலை” (கலித். 50 : 16 - 7) 9. நெடுமொழி : புறநா. 25 : 5, குறிப்புரை. 8 - 9. புறநா. 11 : 8 - 9. 380 : 10. 10. உவலை - தழை; பாசிலைத் தொடுத்த வென்று வந்தமையால், ‘உவலைக்கண்ணி’ என்பது கண்ணியென்னு மாத்திரையாய் நின்றது; கண்ணி - மாலை. 11. “மடிவாய்க் கோவலர்” (பெரும்பாண். 166) ; “இடையன் மடிவிடு வீளை” (அகநா. 274) 12. ஆயமென்பது சிறுதலையென்னும் அடையால் ஆட்டினத்திற் காயிற்று. “சிறுதலை வெள்ளைத் தோடு” (குறுந். 163 : 2) 13 - 4. அவன் நாடு புலிதுஞ்சுவியன் புலம் போல்வது. கோதைக்குப் புலி உவமை. இச்செய்யுளின் பொருளும் “பொருநர்க்காயினும் புலவர்க்கா யினும், அருமறை நாவினந்தணர்க்காயினும்........அடையாவாயிலவனருங் கடைகுறுகி” (சிறுபாண். 203-6) என்பதும் ஒத்திருத்தல் காண்க. ‘அவை புகுதல் இரவலர்க்கு எளிது, நாடு மன்னர்க்குப் புலிதுஞ்சு வியன் புலத்தற்று’ என அரசனியல்பைக் கூறினமையால் இதுவும் அரசவாகையாயிற்று. மு. கருத்து : புறநா. 390 : 4 - 5. (54)
1. வாயைமடித்தல் சீழ்க்கையொலிசெய்தற்கு; ‘சீழ்க்கைபிடித்தலாலே மடித்த வாயையுடைய இடையர்’ (பெரும்பாண். 166, உரை) 2. ‘பாசிலைத் தொடுத்த’ என்றதனால் உவலைக் கண்ணி யென்பதனைப் பெயர் என்றார்; தொடுபொறி, பெயர் மாத்திரையாய் நின்றது’ (புறநா. 58 : 30, உரை)
|