172
ஏற்றுக வுலையே யாக்குக சோறே
கள்ளுங் குறைபட லோம்புக வொள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பிறவுஞ் செய்க வென்னதூஉம்
5பரியல் வேண்டா வருபத நாடி
ஐவனங் காவலர் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிரு ளகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலு மவனிறை
10மாவள் ளீகைக் கோதையும்
மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே.

திணையும் துறையும் அவை.

அவனை வடமவண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

(இ - ள்.) உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக; மதுவையும் நிறைய உண்டாக்குக;விளங்கிய அணிகலத்தையுடைய பாடுதல் வல்ல விறலியர்!மாலையும் சூடுக; அத்தன்மையன மற்றும் செய்க;சிறிதும் இரங்குதல் வேண்டா; மேல் வரக்கடவ உணவைஆராய்ந்து ஐவன நெல்லைக் காப்பார் காவற்கிடப்பட்டதீ அவ்விடத்துக் கெட்ட காலத்து ஒளி விளங்கும்திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்வலிய நிலமாகிய மலைநாட்டை யுடையவன், வலிய குதிரையையுடையபிட்டன் : பொருதற்கரிய போரை வெல்லும் வேலும்அவன் தலைவனாகிய பெரிய வள்ளிய கொடையை யுடையகோதையும் அவனோடு பகைத்த வேந்தரும் நெடிதுவாழ்க-எ - று.

பிட்டன்வேலும் கோதையும் மாறுகொள்மன்னரும் நெடிதுவாழியர்; அதுவே வேண்டுவது; மேல்வரும் உணவைத் தேடிஎன்னதூஉம் பரியல் வேண்டா; ஆதலால், ஏற்றுக; ஆக்குக;ஓம்புக; கோதையும் புனைக; பிறவும் செய்கவெனமாறிக் கூட்டுக.

மாறுகொண் மன்னரும் வாழியரென்றகருத்து : இவன் வென்று திறைகொள்வது அவருளராயினென்பதாம்.

விறலியரென்பது, ஈண்டு முன்னிலைக்கண்வந்தது.

வேண்டா வென்பது வினைமேனின்றதொருமுற்றுச்சொல்.

அன்னவை பிறவுமென்பது பூசுவன உடுப்பனபூண்பன முத லாயினவற்றை.

வருவது நாடி யென்றோதி, ஐவனத்துக்குவரும் இடையூறு நாடி யென்று அதனைக் காவலென்பதனான்முடிப்பினும் அமையும்.


(கு - ரை.) 2 - 3. புறநா. 11 : 11 -3.

6 - 8. கலித். 45 : 1.

7. மணி இருளைப் போக்குமென்பதை,“இருள்பருகுமணி” (சீவக. 169) என்பதன் உரையாலும்உணர்க.

8 - 10. பிட்டன் - சேரனுடைய வீரன்; புறநா.170 : 8; “வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை, யானாநறவின் வண்மகிழ்ப் பிட்டன்”, “வானவன்மறவ, னசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும், பொய்யாவாய்வாட் புனைகழற் பிட்டன்” (அகநா. 77 : 15 -6, 143 : 10 - 12)

9. “கைவண் செழிய னாலங் கானத்,தமர்கடந் துயர்த்த வேல்” (அகநா. 175 : 10 - 12)

10. “வான நாண வரையாது சென்றோர்க்,கானா தீயுங் கவிகை வண்மைக், கடுமான் கோதை” (புறநா.54 : 6 - 8)

9 - 10. “வானவன் மறவன் வணங்குவிற்றடக்கை, ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன், பொருந்தாமன்ன ரருஞ்சமத் துயர்த்த, திருந்திலை யெஃகம்போல” (அகநா. 77 : 15 - 8) (172)