56
ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
5மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
10றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
15ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
20ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25நின்று நிலைஇய ருலகமோ டுடனே.

(பி - ம்.) 5 ‘மண்ணிய’

திணை - அது; துறை - பூவைநிலை.

அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் (பி - ம். அவர்) பாடியது.

(இ - ள்.) ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணி போலுந் திருமிடற்றையுடையோனும், கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கையொக்கும் திருநிறத்தையுடைய கொலையைவிரும்பும் கலப்பையையும் பனைக்கொடி யையுமுடையோனும், கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திருமேனி யையும் வானுற ஓங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்பு வோனும், நீலமணிபோலும் நிறத்தையுடைய 1மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய 2அம்மயிலாகிய ஊர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட உலகங்காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலியினையும் தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வருள்ளும், விலக்குதற்கரிய வெகுட்சியாற் கூற்றத்தை ஒப்பை; வலியால் வாலியோனை ஒப்பை; புகழாற் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒப்பை; கருதியது

முடித்தலான் முருகனை ஒப்பை; அப்படி அப்படி அவரை அவரை ஒத்தலான் எவ்விடத்தும் அரியனவுமுளவோ நினக்கு? ஆதலால், இரப்போர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின் கண்ணே ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக; வென்றியானுயர்ந்த வாளையுடைய மாற! அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே நிறைந்த இருளைப்போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் மேலைத்திக்கிற்றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப்போலவும் இவ்வுலகத்தோடுகூட நின்று நிலை பெறுவாயாக-எ-று.

3பிணிமுகம்-பிள்ளையாரேறும் யானையென்றும் சொல்லுப.
காலமுன்பென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவுகாலத்தைச் செய்யும் வலியை (புறநா. 41 : 1-3)

4மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற்றொழிலையுடைமையான்.

வாலியோனென்றது, நம்பிமூத்தபிரானை (பலதேவரை, ; கலித். 26 : 1, ந.)

இகழுநரடுநனென்றது மாயோனை.

ஆரிருளகற்றும் வெங்கதிர்ச்செல்வனென்றது எழுகின்றஞாயிற்றை.

5மதி-இளம்பிறை.

இது, தேவரோடு உவமித்தமையாற் பூவைநிலைஆயிற்று.


(கு - ரை.) 1. பதினைந்தெழுத்தான் வந்த ஆசிரிய அடிக்கு மேற் கோள்; தொல். செய். சூ, 49, இளம்.

எரிமருளவிர்சடை : “எரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை” (அகநா. கடவுள். 10); “ஊழியெரி, முத்தனீல மோலியென முட்டவோத மீதெரிய” (தக்க. 469)

2. “சீறருங் கணிச்சியோன்” (கலித். 2); “மழுவா ணெடியோன் றலைவ னாக” (மதுரைக். 455)

1-2. “வெள்ளேறு, வலவயி னுயரிய........மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்” (முருகு. 151-4)

3. “வலம்புரி வண்ண” (பரி. 3 : 88); “சங்கமேனிப் புதுநிறத்தோன்” (மதுரைக்கோவை, 143)

4. நாஞ்சில்-கலப்பை. கலப்பையாயுதத்தையும் பனைமரவடிவு எழுதப்பெற்ற கொடியையுமுடையவர் பலராமர். “கொடி என்னும் சொல் ‘பனை’ என்னுஞ் சொல்லுக்குமுன் வரின் ஐகாரம் கெடாது நிற்றற்குப் ‘பனைக்கொடி’ என்பது மேற்கோள்” (தொல். உயிர் மயங்கு. சூ. 83, இளம். ந.)

3-4. “மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனி....... வாய்வாங்கும் வளைநாஞ்சி லொருகுழை யொருவனை” (பரி. 1 : 3 - 5); “வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப், பானிற வண்ணன்” (கலித். 104 : 7 - 8.

2. மண்ணுறுதல்-கழுவுதல்; மு. சிலப். 22 : 97.

5-6. “மண்ணுறு மணிபா யுருவினவை” (பரி. 1 ; 59, வி. கு.

7. “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஒடியா விழவி னெடியோன்” (அகநா. 149 : 15 - 6) ; “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ” (முருகு. 122, குறிப்புரை.)

7-8. “மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப், பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ” (பரி. 17 : 48 - 9)

1-10. “முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா, பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா, சக்கரத் தானை மறப்பின்னா தாங் கின்னா, சத்தியான் றாடொழா தார்க்கு” (இன்னா. 1); “கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே, தொன்மாண் டுழாய்மாலை யானைத் தொழலினிதே” (இனியது. 1) ; “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும்”, “நுதல் விழி நாட்டத் திறையோன் கோயிலும், உவணச் சேவ லுயர்த்தோ னியமமும், மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” (சிலப். 5 : 169 - 72, 14 : 7 - 10) ; “நுதல்விழி நாட்டத் திறையோன் முதலா” (மணி. 1 : 54)

11. புறநா. 3 : 12, 42 : 22; “மடங்கல்போற் சினைஇ” (கலித். 2 : 3) “கால னனைய கடுஞ்சின முன்ப” (பதிற். 39); “தென்புலத் தவன்போற் செய்த சீற்றமும்” (திருக்கழுக்குன்ற. நாராயண. 12); “மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே” (கனாநூல், 15)

12. வாலியோன்-வெண்ணிறமுடையவர். இவர், வலியாற் சிறந்தவரென்பது பலராமர் என்னும் இவர்பெயராலும் அறியப்படும். ‘வால்வளைமேனி வாலியோன்’ என்பதற்கு மேற்கோள்; சிலப். 5 : 171, அடியார்.

வாலியோன்வலி : “விறன்மிகுவலி.....நாஞ்சிலோன்” (பரி. 13 : 32-3) “கொடுமிட னாஞ்சிலான்” (கலித். 36 : 1) ; “விறல் வெள்ளை யாயவன்” (சிலப். 17 : 4)

13. புறநா. 57 : 2-3; “எண்ணிறந்த புகழவை” (பரி. 1 : 60); “தேயா விழுப்புகழ்த் தெய்வம்” (கலித். 103 : 76); “உரைசால் சிறப்பி னெடியோன்” (சிலப். 22 : 60)

17. கலம்-ஆபரணம். அருகாது-குறையாது. ஈயா-ஈந்து.

18. தண்கமழ்தேறல் : புறநா. 24-32, குறிப்புரை.; 292 : 1.

18-21. புறநா. 24 : 31 - 3, குறிப்புரை.

மு. பூவைநிலையாவது ஒன்றனையொன்றுபோற்கூறுந்துறை; அஃது ஓரரசனுக்குத் திருமாலையும் ஏனைத் தேவர்களையும் உவமை கூறுத லென்றுரைத்து இச்செய்யுளை மேற்கோள் காட்டினர்; தொல். புறத்திணை, சூ. 5, ந.; இ. வி. சூ. 167, உரை.

(56)


1.'பிள்ளையாருடைய துவச வாகனமான தோகை மயில்கள் ' (தக்க.114,உரை).

2."பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் , மணி விசும்பிற் கோனேத்த பீறட்ட வெள்வேலே " (சிலப்.24. தெய்வம் பராஅயது, 2);"பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய , மூவிரு திருமுகத் சொருவே லவற்கு"(கல்லாடம்,7).

3. இதனை, "சேயுயர் பிணிமுக மூர்ந்து" (பரி.5), "ஓடாப் பைட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" (முருகு.247) என்பவற்றின் உரைகளால் உணர்க.

4. இவர் காலக்கடவு ளெனவும் கூறப்படுவர்; "எரியெள்ளுவன்ன .... இளம்பிறைசேர்ந்த நுதலன் களங்கனி, மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிச், சூலம் பிடித்த சுடர்ப்படைக், காலக் கடவுட் குயர்கமானே வலனே" (தொல். புறத்திணை.சூ.26,ந.மேற்);"கொலைவன்" (கலித்.103: 15,ந.);குமரகுருபர551.

5. இருகோட் டொருமதி யெழில்பெற மிலைத்தனை" (11ஆம் திருமுறை, திருவெழுகூற்றிருக்கை)