259
ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம்
5முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே.

திணை - கரந்தை; துறை - செருமலைதல்: பிள்ளைப்பெயர்ச்சியுமாம்.

................கோடைபாடிய பெரும்பூதனார் பாடியது.

செருமலைதலாவது:-

‘’வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ

உட்குவரத் தாக்கி யுளர்செருப் புரிந்தன்று” (பு. வெ. 25)

(இ - ள்.) தாம் கொள்ளப்பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது தழையால் மூடிய பெரிய காட்டின்கண் தலைகரந்திருந்த வலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; போகாதொழி, போகாதொழி, நினது மேற்கோள் சிறப்பதாக, தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளையொப்பத் தாவித் துள்ளும் ஆனிரைமேல்; மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக்கழலினையுமுடையோய்!-எ - று.

புனைகழலோய்! காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின் உள்ளம் சிறப்பதாகவெனக் கூட்டுக.

செல்லலென்றது அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்ல லென்பதாம்.


(கு - ரை.) மு. வெட்சித்திணைத்துறைகளுள், ‘ஆபெயர்த்துத் தருதல்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 5, இளம்; ந.

(259)