112
அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
5குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.

திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.

பாரிமகளிர் பாடியது.

(இ - ள்.) மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின் அவ்வெள்ளிய நிலாவின்கண் எம்முடைய தந்தையையும் உடையேம்; எம்முடைய மலையையும் பிறர்கொள்ளார்; இற்றைத் திங்களது இவ்வெள்ளிய நிலவின்கண் வென்று அறைந்த முரசினையுடைய அரசர் எம்முடைய மலையையுங் கொண்டார்; யாம் எம்முடைய தந்தையையும் இழந்தேம்-எ-று.
திங்களை மாதமென்பாரும் உளர்.

ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்; 1வென்றெறி முரசின்வேந்தர்' என்றது ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாய் நின்றது.


(கு - ரை.) 1. முற்றியிருந்த - சூழ்ந்திருந்த. அற்றை என்பது நெஞ்சறி சுட்டு.

4. புறநா. 351 : 5; "வேந்தர், வென்றெறி முரசி னன்பல முழங்கி" (குறுந். 380 : 1 - 2)

(112)


1.வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே" (கம்ப. குகப். 14) என்பதிலுள்ள மன்னருமென்பதும் இப்பொருளதே.