91
வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
5பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
10தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே.

(பி - ம்.) 1 ‘வளம்’ 3 ‘முழவினதிகர்கோமான்’, ‘நறவினுதியர் கோமான்’ 9 - 10 ‘தீங்கனிகுறையாதுகாதனின்’ 11 ‘வெனக்கீத்தோயே’ ‘வெமக்கீத்தோயே’

திணை - பாடாண்டிணை; துறை -வாழ்த்தியல்.

அவனை அவர் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது

(இ - ள்.) வென்றியுண்டான தப்பாதவாளையெடுத்துப் பகைவர் களத்தின்கட்பட வென்றகழல இடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையினையுடைமிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர்கோமான்! மாற்றாரைப் போரின்கட்கொல்லும்வீரச்செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்டமாலையையுமுடைய அஞ்சி! நீ, பால்போலும் பிறை நுதல்போலப்பொலிந்த திருமுடியினையும் நீலமணிபோலும் கரியதிருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல நிலைபெறுவாயாக;பெரும! நீ, பழைய நிலைமையையுடைய பெரியமலையிடத்துவிடரின்கண் அரிய உச்சிக்கட்கொள்ளப்பட்டசிறிய இலையினையுடைய நெல்லின் இனிய பழத்தைப்பெறுதற்கரிதென்று கருதாது அதனாற் பெறும் பெரும்பேற்றினைஎமக்குக்கூறாது நின்னுள்ளே அடக்கிச் சாதல் ஒழியஎமக்கு அளித்தாயாதலால்-எ - று.

‘நீல மணிமிடற் றொருவன் போல’என்ற கருத்து, 1 சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும்நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல்வேண்டுமென்பதாம்.

அதியர்கோமான்! அஞ்சி! நெல்லித்தீங்கனிஎமக்கு ஈத்தாயாதலால், பெரும! நீ நீலமணிமிடற்றொருவன்போலமன்னுகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

‘பிறைநுதற் பொலிந்த சென்னி’என்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னியெனினும்அமையும்.


(கு - ரை.) 2. களம்படக்கடத்தல்;புறநா. 91 : 2; “செங்களம் படக்கொன்று” (குறுந்.1 : 1). கழறொடி : புறநா. 128 : 5.

3. ‘அதியர்’ என்பது குடிப்பெயர்.

4. திருவிற்பொலந்தார் : புறநா.10 : 10, குறிப்புரை.

6. தன்னுடைய ஆக்கங் கருதாமல் விடத்தையுண்டுபல்லுயிர்களையும் காத்தருளிய புண்ணியனாதலின்,நீலமணிமிடற் றொருவனை உவமை கூறினார்; “போகம்மீன்ற புண்ணியன்” (சீவக. 362) என்பதையும்அதன் உரையையும் பார்க்க.
5-6. ‘பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடையஅழலவிர் சோதி யருமறைக்கடவுள்’ (இறை. சூ. 1.உரை). பிறைநுதற்சென்னி ஒருவன்: 1 : 9, குறிப்புரை; 55 :4 - 5, குறிப்புரை. “மிக்கொளிர் தாழ்சடைமேவரும் பிறைநுதன், முக்கண்ணான்” (கலித்.104 : 11 - 2)

7. புறநா. 6 : 28.

8. ‘விடரகம்’ என்பது அம்மலைப்பெயராகவும்கருதப்படுகின்றது; அகநா. 271, பார்க்க. விடரகம்: புறநா. 37 : 4; கலித். 103 : 19.

9. “சிறியிலை நெல்லிக்காய்”,“சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்”(அகநா. 284, 291)

10. ‘அடக்கி’ என்றது ஆழமுடைமையை;“அட்டதை, மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினுமிலனே” (புறநா. 77) என்பதும் அது.

9-11. “மால்வரைக், கமழ்பூஞ் சாரற்கவினிய நெல்லி, அமிழ்துவிளை தீங்கனி யௌவைக்கீந்த.....அதிகனும்” (சிறுபாண். 99 - 103), “பூங்கமலவாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும், ஆங்குவரு பாற்பெண்ணையாற்றினையும்-ஈங்கு,மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னாவை, அறுப்பித்தாயாமலகந் தந்து” (ஒளவையார் பாட்டு); ‘இனியகனிகளென்றதுஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை’(குறள், 100, பரிமேல்.), “நெல்லியமுதௌவைக் களித்துநெடு வேலதிகன், மல்குபுகழ் கொண்டான்வடமலையே” (வடமலைவெண்பா) என்பவை இந்தச்சரித்திரத்தைப் புலப்படுத்தும்.

(91)


1. “விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ வொருவரும்,உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்” (சிலப்.12 : ‘துண்ணென் றுடியொடு’)