387
வள்ளுகிர வயலாமை
வெள்ளகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை யியக்கி யென்றும்
மாறுகொண்டோர் மதிலிடறி
நீறாடிய நறுங்கவுள
பூம்பொறிப் பணையெருத்தின
வேறுவேறு பரந்தியங்கி
வேந்துடைமிளை யயல்பரக்கும்
ஏந்துகோட் டிரும்பிணர்த்தடக்கைத்
திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குர வகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்
றியானிசைப்பி னனிநன்றெனாப்
பலபிற வாழ்த்த விருந்தோ ரென்கோ.......
மருவவினக ரகன்
திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன்முரசினோன்
என்சிறுமையி னிழித்துநோக்கான்
தன்பெருமையின் றகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்றுநிறையு நிரையென்கோ
மனைக்களமரொடு களமென்கோ
ஆங்கவை, கனவென மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைசா றோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவன்
விடுவர் மாதோ நெடிதே நி.........
புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

(பி - ம்.) 2 ‘வௌககொணடனன’ 4 ‘தென்கண்’ 8 ‘பாநதியயங்கி’ 9 ‘வேந்துடையிளை’ 13 - 6 நகைபபல வாழ்நர் - மிபபொலி யாத செவடி பொலியாததையென்றனியானிசப பினனினனனிநனறனிற பலபிறன்’ 16 ‘ரெலகோ’ 17 ‘மிருவ’ 19 - 20 ‘வெனறிரககு முரசி னானெனச சிலமபினிழித்து’ 20 ‘எனசசிறுமை’ 22 ‘குனறகழகளிறு’ 25 ‘மகனைககளமரொடு கலமென’ 27 ‘நலகியோனெநதை நகைசான றோன்றல்’ 31 ‘என்னாத்தெவ்வர்’,‘பணிததிவணிவிடுவா’ 34 ‘மணலினுமாக்கட்’

திணையும் துறையும் அவை.

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட்பாலியாதன்.


(கு - ரை.) 1. வள் - கூர்மை ; “வள்ளணி வளைநாஞ்சிலவை” (பரி. 15 : 57)

2. அகடு - வயிறு.

1 - 4. கிணைப்பறை ஆமையின் அகடுபோல்வது ; “ஆமை, கம்புளியவ னாக விசிபிணித், தெண்கட் கிணையிற் பிறழும்” (அகநா. 356 : 2 - 4) ; பு. வெ. 186, 306.

7. எருத்து - பிடரி. 9. மிளை - காவற்காடு.

11. பகடு - யானை. 13. நகைப்புலவாணர் - புலவர்.

12 - 3. பகைவர் அளித்த திறையைத் தம்மைச்சார்ந்த இரவலர்க்குக் கொடுத்தல் அரசர்க்கியல்பு.

14. தன் சேவடி மிகப்பொலிக. 16. என்கோ - என்பேனோ.

17. மருவுதற்கு இனிய நகரம்.

19. வென்று - போர்க்களத்தில் வஞ்சியாது பகைவர்க்கு முன்னே நின்று ; புறநா. 112 : 4, குறிப்புரை.

20. என்னை இழித்து நோக்கானாகி.

21. தன்னுடைய மேம்பாட்டை அறிந்து. 23. மா - குதிரை.

22 - 3. ஓகாரம் எண்ணுப்பொருளில் வந்ததற்கும், அதன்பின் வல்லினம் இயல்பாயதற்கும் இவ்வடிகள் மேற்கோள் ; தொல். உயிர் மயங்கு. சூ. 88, இளம்.; ந.

24. நிரை - பசுக்கூட்டம்.

26. “கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப” (பொருந. 98) ; புறநா. 140 : 5 - 8, குறிப்புரை.

26 - 7. “கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவி னல்கியோ னசைசா றோன்றல்” (புறநா. 377 : 19 - 20)

30. இப்பாட்டுடைத்தலைவன் பெயர் இவ்வடியில் அமைந்துள்ளது.

31. பணித்து - தாழ்த்தி.

33. வஞ்சியென்னும் மரவிசேடத்திற்கு உரிய ‘புல்லிலை’ என்னும் அடை அதன் பெயரையுடையதாகிய நகருக்கும் ஆயிற்று.

34. பொருநை - ஓராறு. “தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன், நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார், போர் முற்றொன் றறியாத புரிசை” (கலித். 67 : 3 - 5)

33 - 4. “ஒளிதிக ழுத்தி யுருகெழு நாகம்” (பரி. 12 : 4, பரிமேல்.) என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; கலித். 67 : 3 - 4.

34 - 6. “மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28 : 125 - 6)

(387)