302
வெடிவேய் கொள்வது போல வோடித்
தாவு புகளு மாவே பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
5ஐதமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க் கோக்கிய
நிரம்பா வியல்பிற் கரம்பைச் சீறூர்
நோக்கினர்ச் செகுக்குங் காளை யூக்கி
வேலி னட்ட களிறுபெயர்த் தெண்ணின்
10விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெய லுறையு முறையாற் றாவே.

(பி - ம்.) 2 ‘தாவ வுகளும்’ 4 -5 ‘சுற்றி யைதமை’ 6 ‘கைகவர் நரம்பின்’ 8 ‘யூக்கு’9 ‘வேலினிட்ட’

திணை - அது; துறை - குதிரைமறம்.

வெறிபாடிய காமக்கண்ணியார்.(பி - ம். வெறிபாபாடிய காமக் கணியார்)


(கு - ரை.) 1. வெடிகொள்ளல் - மேல்எழல்.

2. தாவுபு - தாவி. உகளும் - துள்ளும்.மா - குதிரை. பூ - பொற் பூக்கள்.

1 - 2 வளைத்துவிட்ட மூங்கில் மேலேவிரைந்தெழுதல்குதிரை ஓடித் தாவிச்செல்லற்கு உவமம்; ‘’விட்டகுதிரை விசைப்பி னன்ன, விசும்புதோய் பசுங்கழைக்குன்ற நாடன்” (குறுந். 74 : 1 - 2)

3. மகளிர் - இங்கே விறலியர்.

2 - 3. பூக்கள் கூந்தலிற் கொள்ளப்பட்டன.

4. நரந்தம் - நாரத்தை மலர்; குறிஞ்சிப்.94. காழ் - வடம்.

5. ஐது அமை - அழகிதாக அமைந்த.பாணி - தாளம். வணர் - வளைவு. கோடு - மருப்பென்னும்உறுப்பு.

4 - 5. நரந்த மலர்களாலாகிய மாலைசுற்றியயாழ். யாழின் கோட்டில் மாலையைச் சுற்றுதல் மரபு ;‘’அன்ன மாலையை யாழிடைப் பிணித்தய னுலகம், கன்னிமீடலும்” (கம்ப. அகலிகை. 6)

6. வார்தல் - எட்டுவகை இசைக்கரணங்களுள்ஒன்று; அது சுட்டு விரலாற் செய்யப்படும் ஒரு தொழிலென்பர்(சிலப். 7 : 1, அரும்பத.) நரம்புகளைக் கூடத்தழுவலென்பர்நச்சினார்க்கினியர் (பொருந. 23) ஓக்கிய -அறுதியாகக் கொடுத்தவை.

5 - 6. ‘’வணர்கோட்டுச் சீறியாழ்வாடுபுடைத் தழீஇ, உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக்,கிளக்கும் பாண” (புறநா. 155 : 1 - 2)

ஓக்கிய (6) சீறூர் (7)

8. கோபித்துப்பார்த்த பகைவர்களைக்கொல்லுகின்ற வீரன்; ‘’எள்ளுநர்ச் செகுக்குங்காளை” (புறநா. 303 : 3). ஊக்கி - மேற்கொண்டு.

9. வேலின் அட்ட களிறு : 301 : 15 - 6,குறிப்புரை.

10. விண் - மேகம். இவர்தல் - பரத்தல்.மீன் - நட்சத்திரம்.

11. உறை - மழைத்துளி.

10 - 11. மீன்களும் மழைத்துளிகளும்உறையிடப்போதா; புறநா. 34 : 20 - 23. குறிப்புரை.‘’யானைத் தூமருப் பியன்ற வெண்செப், பந்தரத்தலர்ந்த பன்மீ னெனைத்துள வனைத்து மாதோ” (சீவக.3048)

(302)