177
ஒளிறுவாண் மன்ன ரொண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமரெனின் யாவரும் புகுப வமரெனிற்
5றிங்களு நுழையா வெந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த
குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்க ணாடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10மட்டற னல்யாற் றெக்க ரேறிக்
கருங்கனி நாவ லிருந்துகொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட்
டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை
15வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

திணையும் துறையும் அவை.

மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார்பாடியது.

(இ - ள்.) விளங்கிய வாளையுடையவேந்தரது ஒள்ளிய விளக்கத்தினையுடைய உயர்ந்தகோயிற்கண் கண்ணொளி கெடப் பலநாள் நின்று உலர்ந்துஅவ்விடத்துப்பாடிப்பெற்ற பொற்படையணிந்தயானை, தமக் குச் சிறந்தாராயின் எல்லாரும்எளிதிற் புகப்பெறுவர், போராயின் திங்களாலும்நுழையப்படாத பொறிகளைப்பொருந்திய இட்டியவாயிலையுடைத்தாய்க் கள்ளை ஒருவர்க்கொருவர் மாறுமாறாகநீட்டிட ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த குறிய பலஅரணின்கண்ணேயிருந்து அக்கள்ளை நிரம்பவுண்டு காலங்கழித்துப்பின்னைச் செருக்கினால் விடாய்மிக்குப் புளிச்சுவையைவிரும்பிய மதத்தாற்சிவந்த கண்ணையுடைய ஆண்மக்கள்இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்பழத்தைத்தின்று வெறுப்பிற் கரை மரத்துப் பைந்தேன் அரித்தொழுகுகின்றநல்ல கான்யாற்றினது மணற்குன்றின்கண்ணேயேறிக்கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந்துண்ணும் பெரியபெயரையுடையனாகிய ஆதியினது, பிணங்கிய அரில்பட்டகாட்டையுடைய குடநாட்டின்கண் மறவர் எய்து கொடுவரப்பட்டஎய்ப்பன்றியினது கடியப்பட்ட தசையினது செவ்வியையுடையநிணமிக்க புதிய வெண்சோற்றுக்கட்டியை வருவார்க்கெல்லாம்ஒப்பக்கொடுவந்து சொரியப் பெரிய பனையோலையானியன்றகுடையிலே நுகரும் பெரிய புலர்ச்சியையுடைய விடியற்காலத்துச்சீருக்கு நிகரொவ்வாது-எ - று.

எந்திரப்புழையையுடைய நணிநணியிருந்தகுறும்பிற் கண்மாறு நீட்டத் ததும்ப உண்டு வைகிப்புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கரேறியிருந்துநாவற்கனி கொய்து உண்ணுமென வியையும்.

பாடிப்பெற்ற யானையும் பன்னாள்திரங்கிப்பெற்றமையிற் பனங் குடையின் மிசையும் வைகறைச்சீர்சாலாதென்றார்.

வெளிறுகண்போகப்பாடியெனக்கூட்டி,வெண்மை இடத்தினின்றும் நீங்கப் பாடியெனினும்அமையும்.

வைகறைச் சீர்சாலாதென்றது, அக்காலத்துஅவன்செய்யும் சிறப்பினை நோக்கி.

‘கைமாறு நீட்டி நணிநணி யிருந்து,குறும்பல் குறும்பிற் றதும்ப உண்டுவைகி’ என்றுபாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 1. “ஒளிறுவாட் பொருப்பன்”(பரி. 22 : 1)

2. கண் வெளிறுபோதல் : “நீளிடையத்த நோக்கி வாளற்றுக், கண்ணுங் காட்சி தௌவின”(நற். 397); “என் கண்ணே, நோக்கி நோக்கிவாளிழந் தனவே” (குறுந். 44); “கோலஞ் செய்பவர்கோல வெறிப்பினான், மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே”(சீவக. 2397). திரங்கல் - உலர்தல்; “நிழலிடம்பெறாது, மடமா னம்பிணை மறியொடு திரங்க” (ஐங்குறு.326)

1 - 2. “அகத்தாரே வாழ்வாரென்றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடைபற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்,தவத்தாற் றவஞ்செய்யா தார்” (நாலடி. 31)

6. “நணிநணித் தாயினுஞ் சேஎய்ச்சேய்த்து” (பரி. 17 : 25)

9. “களவுப்புளி” (புறநா.352); “களவும் புளித்தன” (அகநா. 394)

10. புறநா. 115 : 3 - 4.

11. “காலி னுதிர்ந்தன கருங்கனிநாவல்” (மலைபடு. 135)

10 - 11. எக்கர்....நாவல் : மணி.17 : 25 - 30, 34.

14. “ஊன்சோற் றமலை” (புறநா.33 : 14)

14 - 5. “செல்விருந் தோம்பிவருவிருந்து பார்த்திருப்பான்” (குறள், 86)

16. பனங்குடை - பனையோலையாற்செய்யப்பட்டஉண்கலம்; புறநா. 352; “பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப்பாரி” (நற். 253 : 7); “வேணீ ருண்ட குடையோரன்னர்” (கலித். 23); “ஆறுசென் மாக்கள்சோறுபொதி வெண்குடை” (அகநா. 121); “குடைகலனா,உப்பிலி வெந்தை தின்று” (நாலடி. 289); தணிகை.களவு. 339.

(177)