55
ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
20கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே.

(பி - ம்.) 1 ‘நாண்’ 7 ‘பரிமா’ 8 ‘எனும்’ 13 ‘வெந்தெற’ 16 ‘உடையாயாதலினில்லோர்’, ‘உடையையாதலினி’ 17 ‘நீடுவையொழிய’

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

(இ - ள்.) உயர்ந்தமலையாகிய பெரியவில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி ஒப்பில்லாததோர் அம்பைவாங்கி மூன்றுமதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்கட்கு வெற்றியைக்கொடுத்த கரியநிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப்பக்கத்து அணிந்த பிறைசேர்ந்த திருநெற்றிக்கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம்போல மூவேந்தருள்ளும் மேம்பட்ட பூந்தாரையுடைய மாற! கடிய சினத்தை யுடையவாகிய கொல்களிறும் விரைந்த செலவையுடையவாகிய மனஞ்செருக்கிய குதிரையும் நெடிய கொடியையுடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சுவலியையுடைய போரைவிரும்பும் மறவருமென நான்கு படையுங்கூட மாட்சிமைப்பட்டதாயினும் மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால், அவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு அயலாரென்று அவர் நற்குணங்களைக் கெடாது, ஞாயிற்றைப் போன்ற வெய்யதிறலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற வண்மையுமென்ற மூன்றையுமுடையையாகி இல்லாதோர் இல்லையாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக, நெடுந்தகாய்! தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை அலைக்கும் செந்திலிடத்து நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறைக்கண் பெருங் காற்றுத்திரட்டுதலால் குவிந்த வடு அழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் - எ - று.

‘குணம்கொல்லாது’ என்பதற்கு முறைமையழிய நீ வேண்டியவாறு செய்யாதெனினுமாம்.

பூந்தார்மாற! நெடுந்தகாய்! நான்குடன்மாண்டதாயினும், அரசின் கொற்றம் அறநெறிமுதற்று; அதனால் கோல்கோடாது, குணங்கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையையாகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலம் நீடுவாழியவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.


(கு - ரை.) 1. மலை - மேருமலை. கொளீஇ - கொளுத்தி, பொருத்தி. நேர்புநிரை ஆசிரியத்துள் வந்ததற்கும் (தொல். செய். சூ. 14, பேர். ந.), தளைநிலைவகையான் வந்து கட்டளையாய் இன்னோசைபெற்றதற்கும் (தொல். செய். சூ. 54, ந.) மேற்கோள்.

2. ஒருகணை - திருமால் வாயு அக்கினி என்னு மூவரின் கூற்றா லாகிய ஒரு பாணம். மூ எயில் - மூன்றுமதில்.

3. தருசொல் படர்க்கைக்கண் வந்ததற்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 29, சே. ந.; இ. வி. சூ. 301, உரை.

1 - 4. “தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின், மடங்கல்போற் சினைஇ மாயஞ் செயவுணரைக், கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும், உடன் றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலின்” (கலித். 2); “திரிபுரமெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல் கேட்ப” (சிலப். 6 : 40 - 41).

4 - 5. புறநா. 1 : 9, குறிப்புரை.; 91 : 5 - 6; “பிறைநுதல்விளங்கும்”, “தேய்பொடி வெள்ளை பூசி யதன் மேலோர் திங்க டிலகம் பதித்த நுதலர்” (தே.)

6. தார் - இங்கே வேப்பமாலை.

பதினெட்டெழுத்தான் வந்த ஆசிரிய அடிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 49, இளம்.

8. பத்தொன்பதெழுத்தான் வந்த ஆசிரிய அடிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 49, இளம்.

7-8.புறநா. 72 : 3-5, 351 : 1-3.

7-9. திணைவிராயெண்ணப்பட்ட பெயர் செய்யுளகத்து அஃறிணைச் சொற்கொண்டு முடியுமென்பதற்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 51, சே.; ந.; இ. வி. சூ. 298, உரை.

10. புறநா. 27 : 17-8, குறிப்புரை.

9-10. “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா, மான முடைய தரசு”, “வேலன்று வென்றி தருவது மன்னவன், கோலதூஉங் கோடா தெனின்” (384, 546) என்னுந் திருக்குறள்களின்விசேடவுரையில், ‘மாண்ட, அறநெறி முதற்றே யரசின் கொற்றம்’ என்னும் இப்பகுதியை மேற்கோளாக எடுத்துக் காட்டினர் பரிமேலழகர்.

“உருளு நேமியு மொண்சுட ரெஃகமு, மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும், தெருளு நல்லற மும்மனச் செம்மையும், அருளு நீத்தபி னாவதுண் டாகுமோ”, “அறத்தினா லன்றி யமரர்க்கு மருஞ்சமங்கடத்தல், மறத்தி னாலரி தென்பது மனத்திடை வலித்தி” (கம்ப. மந்தரை. 11; முதற்போர். 225)

11.புறநா. 6 : 9-10; “எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால், தங்கண்ண ரானுந் தகவில கண்டக்கால், வன்கண்ண னாகி யொறுக்க வொறுக்கல்லா, மென்கண்ண னாளா னரசு” (பழமொழி. 322)

13-4. “நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள, நின், தண்மையுஞ் சாயலுந் திங்களுள, நின், சுரத்தலும் வண்மையு மாரியுள” (பரி. 4 : 25-7.)

15.புறநா. 54 : 6-7, குறிப்புரை; 133 : 6-7, 142 : 3-5, 158 : 7, 397 : 16; சிறுபாண். 124-6; மலைபடு. 580; “பொழிபெயல் வண்மையான்” (கலித். 57 : 12)

13-6. புறநா. 59 : 6 - 7; “ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள் சீக்குஞ் சுடரேபோல், வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்த கொடுமையும், நீண்டுதோன் றுயர்குடை நிழலெனச் சேர்ந்தார்க்குக், காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையும், மாண்டநின் னொழுக்கத்தால்” (கலித். 100); “நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும், தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே” (சூளா. நகர. 17)

18-9. செந்தில் : “திருமணி விளக்கி னலைவாய்ச், செருமிகு சேஎய்” (அகநா. 266); “அலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே” (முருகு. 125); “சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமு நீங்கா விறைவன்” (சிலப். : 24 : தெய்வம்பராஅயது); “நஞ்செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதைகண்டாய்” (தே); “முருகன் றீம்புன லலைவாய்” (தொல். களவு. சூ. 23, ந.; “பையுண்மாலை”)

21. மு. மலைபடு. 556, எக்கர்மணல் : “கான லணிந்த வுயர்மண லெக்கர்”, “முத்துறழ் மணலெக்கர்” (கலித். 133 : 2, 136 : 5)

மணலைப் பன்மைசுட்டற்கு உவமித்தல்; புறநா. 363 : 4; மதுரைக். 236, குறிப்புரை.

17-21. புறநா. 9 : 8-11, குறிப்புரை; 43 : 21-3, 136 : 26, 198 : 17 - 23.

(55)