251
ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
5கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே.

திணை - வாகை; துறை - தாபதவாகை.
...............மாற்பித்தியார் பாடியது.

(இ - ள்.) ஓவியம்போலும் அழகினையுடைத்தாகியஇடமுடைய இல்லின்கண் 1 கொல்லிப்பாவைபோன்றவடிவினையுடைய சிறிய வளை யணிந்த மகளிருடைய அணிகலங்களைஅவை நிற்கும் நிலையினின்றும் கழலும்வகை ஆதரஞ்செய்தவனைக்கண்டேம்; மூங்கிலிடத்தையுடைய நெடியமலையிடத்துஅருவிநீரை யாடிக் காட்டியானை கொண்டுவரப்பட்ட விறகால்மிக்க வெம்மையையுடைய செந்தீயை வேட்டு முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன் -எ - று.

ஆடி வேட்டுப் புலர்த்துவோனென இயையும்.

முன்பு இழைநெகிழ்த்த மள்ளற் கண்டேம்,அவன் இப்பொழுது புறந்தாழ் புரிசடைபுலர்த்தாநின்றோனென அவனைக் கண்டு வியந்து கூறியவாறு.

பாவையென்றது, பிறிது எவ்வுணர்வுமின்றிக்காமவேட்கையாகிய ஒரு குறிப்பினை.

கானயானை தந்த விறகென்றது, இவன் தவமிகுதியான் அதுவும் ஏவல் செய்தல்.


(கு - ரை.) 1. மு. நற். 182 : 2; ‘’ஓவுக்கண்டன்ன வில்” (நற். 268; 1); ‘’ஓவத் தன்னவினைபுனை நல்லில்”, ‘’ஓவத் தன்ன வுருகெழுநெடுநகர்” (பதிற். 61 : 3. 88 : 28); ‘’ஓவத் தன்னவினைபுனை நல்லில்” (அகநா. 98 : 11)

‘ஓவத் தன்ன விடனுடை வரைப்பின்என்புழி அந்நகரினது செயற்கை நலம் தோன்றக் கூறினமையின்அதற்கு நிலைக்களன் நலனாயிற்று’ (தொல். உவம.சூ. 4, இளம்.; பேர்.; இ. வி. சூ. 639; மாறன்.92, உரை)

2. ‘’செய்வுறு பாவை யன்னவென்,மெய்பிறி தாகுதல்” (குறுந். 195 : 6); ‘’வல்லவன்றைஇய பாவைகொல்......செல்வ மகள்” (கலித்.56 : 7 - 12) 4 - 7. கலித.் 93 : 35.

5 - 6. புறநா. 247 : 1 - 2; தவஞ்செய்வோர்க்குயானைகள் விறகுதருமென்பதை, ‘’செந்தீப் பேணியமுனிவர் வெண்கோட்டுக், களிறுதரு விறகின் வேட்கும்,ஒளிறிலங் கருவிய மலைகிழவோனே” (பெரும்பாண்.498 - 500) என்பதனாலும் அதன் அடிக்குறிப்பாலும் அறிக.

மு. வாகைத்திணைத்துறைகளுள்,‘நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்’ என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 16, இளம்.; சூ. 20, .

(251)


1 கொல்லிப்பாவை: நற். 185,192, 201; குறுந். 89, 100; அகநா. 62, 209.