336
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்பிவ டந்தையுஞ் செய்யான்
ஒளிறுமுகத் தேந்திய வீங்குதொடி மருப்பிற்
களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த
5ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த் தனரே
இயவரு மறியாப் பல்லியங் கறங்க
அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர்
அறனிலண் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
10முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத்
தகைவளர்த் தெடுத்த நகையொடு
பகைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே.

(பி - ம்.) 1 ‘பெருஞ்சினத்தனனே' 2 ‘கெடவனகறிபபிள்' 5 ‘வாயுமூழ்த்தனரே' 7 ‘றில்லங்கடி மூதூரறனிலமனற' 12 ‘பண்பிற்றாமே'

திணை - காஞ்சி; துறை - மகட்பாற்காஞ்சி.

பரணர்.


(கு - ரை.) 1. வேட்ட - மணஞ்செய்தற்கு விரும்பிய.

2. கழிப்பு - கழித்தலை.

1 - 2. புறநா. 346 ; 1 - 3.

4. கடிமரம் - காவன்மரம். 5. மூழ்த்தனர் - மூடினர் ; முகிழ்த்தனர்.

6. இயவர் - வாச்சியக்காரர்.

7. பெரும்பேதுற்றன்று - பெரிய மயக்கத்தை யடைந்தது.

8. மன்ற - நிச்சயமாக. விறன்மலை : "விறன்மலை வியலறை" (கலித்.53 : 2)

9 - 10. "முதிர்கோங்கின் முகையென...................பெருத்தநின் னிளமுலை" (கலித். 56 : 23 - 4) முகை - அரும்பு.

11. நகை - மகிழ்ச்சி. தாய் (12) அறனிலள் (8)

(336)