152
வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக்
கேழற் பன்றி வீழ வயல
5தாழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன்
விலைவன் போலான் வெறுக்கைநன் குடையன்
10ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
சார லருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ வல்லன் கொல்லோ
பாடுவல் விறலியோர் வண்ண நீரும்
மண்முழா வமைமின் பண்யாழ் நிறுமின்
15கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின்
எல்லரி தொடுமி னாகுளி தொடுமின்
பதலை யொருகண் பையென வியக்குமின்
மதலை மாக்கோல் கைவலந் தமினென்
றிறைவ னாகலிற் சொல்லுபு குறுதி
20மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியாம்
நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
வேட்டுவ ரில்லை நின்னொப் போரென
25வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்திற்
றானுயிர் செகுத்த மானிணப் புழுக்கோ
டானுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
30சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா வீகை விறல்வெய் யோனே.

திணை - அது; துறை - பரிசில்விடை.

வல்விலோரியை வன்பரணர் பாடியது.

(இ - ள்.) ஆனையைக் கொன்றுவீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரிய வாயையுடைய புலியை இறந்துபாட்டையுறுவித்துத் துளை பொருந்திய கோட்டையுடைத்தாகிய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி உரல்போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும் வல்வில்லாலுண்டாகிய வேட்டத்தை வென்றிப்படுத்தி யிருந்தவன், புகழமைந்த சிறப்பினையுடைய அம்பு ஏத்தொழிலிலே மிகச் சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் யாரோதான்? கொலைவன் மற்றிவன், விலை ஏதுவாகக் கொன்றானாக மாட்டான்; செல்வத்தை மிகவுடை யனாயிருந்தான்; சந்தனம் பூசிப்புலர்த்திய அழகிய பரந்த மார்பினையுடைய, சாரற்கண்ணே அருவியையுடைய பயன்படுமலைக்குத் தலைவனாகிய ஓரியோ அல்லனோதான்? அவனாகத் தகும்; யான் பாடுவேன், விறலி! ஒருவண்ணம்; நீங்களும் முழாவின் கண்ணே மார்ச்சனையை யிடுமின்; யாழிலே பண்ணை நிறுத்துமின்; கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கைபோலும் வடிவை யுடைய பெருவங்கியத்தை இசையுங்கோள்; சல்லியை வாசியுமின்; சிறு பறையை அறையுங்கோள்; பதலையில் ஒருமுகத்தை மெல்லெனக் கொட்டுமின்; நமது 1பிறப்புணர்த்தும் கரியகோலைக் கையின்கண்ணே தாருங்கோளென்று சொல்லி அணுகித் தலைவனாதலாலே இருபத்தொரு பாடற்றுறையையும் முறையாற் பாடி முடித்துப் பின்னர்க் கோவேயென்று அவன்பெயர் கூறியகாலத்து அவ்விடத்து அவ்வார்த்தை தன் பெயராதலால் நாணி, பின்னை யாங்கள் ‘நாட்டிடந்தோறும் நாட்டிடந்தோறும் ஒப்போர்’ என யாம் விரும்பியது கூறவும் அதற்குக் காலந்தரானாய் சென்றுவருவேம்; இவ்விடத்து ஒரு வேட்டுவரில்லை, நின்னை வேட்டையின்கண் தான் எய்த மானினது நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே ஆவின் நெய்யை உருக்கினாற்போன்ற மதுவைத் தந்து தன்னுடைய மலையின்கட் பிறந்த வலியில்லாத நல்ல பொன்னைப் பல மணித்திரளுடனே கலந்து இதனைக் கொண்மினெனச்சொல்லிச் சுரத்திடத்தே எமக்குத் தந்தான்; முழையை யுடைத்தாகிய உச்சியையுடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன், பாதுகாவாத வண்மையினையுடைய வென்றியை விரும்புவோன்-எ - று.

புழலென்றது ஆகுபெயராற் புழலையுடைய கோட்டை.
களிற்றுயிரென்றது ஆகுபெயராற் களிற்றினது கைபோலும் வடிவையுடைய பெருவங்கியத்தை. பாடுவல்விறலியோர் வண்ணமென்றது நீயும் ஒன்று பாடுவாயாக வென்னும் நினைவிற்று. நீருமென்றது கூட்டத்தை.


1நுண்கோல் - பிறப்புணர்த்துங்கோல்; பதிற். 43 : 27, உரை.

1மூவேழ்துறையுமென்றது 2வலிவு மெலிவு சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழுதானம் முடித்துப்பாடும் பாடற்றுறையை; அன்றி, இருபத்தொருநரம்பால் தொடுக்கப்படும் பேரியாழெனினும் அமையும்.
தம்மினென்றது தமினெனக் குறைந்து நின்றது.

கொல்லிப்பொருநனாகிய விறல்வெய்யோன் கோவெனப் பெயரிய காலை, அது தன்பெயராகலின் நாணி வேட்டதுமொழியவும் விடானாய் நல்கியோனெனக் கூட்டுக.


(கு - ரை.) 1. யானையை அம்பாற் கொல்லுதல் : அகநா.172 : 7 - 9; பெருங். 2. 14 : 48 - 9.

2. பேழ்வாயுழுவை: புறநா.33 : 9. பெரும்பிறிது: மணி.23 : 28.

3. புகர் - புள்ளிமான்; "புகராருருவாகி முனிந்தவனை" (பெரிய திருமொழி.2 : 4 : 7)

4. ‘வேழக்கரும்பு, கேழற்பன்றியென்புழித் தொக்கனவில்லையெனினும் தொகையென வேண்டப்படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலிற் றொகையென்பார்க்கும் ஒட்டி ஒரு சொன்னீர்மைப் படுதலும் தொகையிலக்கணமெனல் வேண்டும்' (தொல்.எச்ச. சூ. 16, சே.); ‘கேழற்பன்றி, வேழக்கரும்பென்பனவற்றிற்குத் தொக்கன இன்மையிற் றொகைச்சொல்லாமாறு என்னையெனின், அவற்றிற்கும் ஒன்றையொன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்துதற்கு வரும் ஆகிய என்னும் வாசகம் தொக்குநின்றதென்றே கோடும்' (தொல். எச்ச. சூ. 16, .); ‘கேழற்பன்றி முதலாயினவும் சாதிதொக்க பண்புடைமையின் ஈண்டு வேண்டினாரென்க', ‘பூமலர், பூம்போது, களிற்றொருத்தல், கேழற்பன்றி யென்றற்றொடக்கத்தன வோவெனின்,......கேழலென்பது எய்ப்பன்றி முதலானவற்றை நீக்குதலானும் பொருள்வேறுபாடுடைமையின் ஒருபொருட்பன்மொழியாகா; பண்புத் தொகையுள் அடங்குமென்க' (நன். சூ. 364, 367, மயிலை.)

3-4. உரற்றலைக்கேழற்பன்றி: "உரற்றலை யுருவப் பன்றி யிடம் வலந் திரிய" (சீவக.2202)

5. வல்வில் வேட்டம் - மிக்க வன்மையையுடையதும் பலவற்றை ஊடுருவிச் செல்லும்படி அம்பை விரைவிற் செலுத்துவதுமாகிய வில் வேட்டம்; புறநா.150 : 7; "அரக்கர் தலைவன்றன், வற்பார் திணிதோளைந் நான்குந் துணித்த வல்வி லிராமனிடம்" (பெரிய திருமொழி,5. 1 : 4)

1-6. இவ்வடிகளுடன், "அலையுருவக் கடலுருவத் தாண்டகைதன் னீண்டுயர்ந்த, நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா, உலையுருவக் கனலுமிழ்கட் டாடகைதன் னுரமுருவி, மலையுருவி மரமுருவி மண்ணுருவிற் றொருவாளி", "வெய்ய வாளியை யாளுடை வில்லியும் விட்டான்", "ஏழு மாமர முருவிக்கீ ழுலகமென் றிசைக்கும், ஏழு மூடுபுக் குருவிப்பின் னுடனடுத் தியன்ற, ஏழி லாமையின் மீண்டதவ் விராகவன் பகழி" (கம்ப. குலமுறை. 26, மராமர. 137, 138) என்பவை ஒப்புநோக்கற்பாலன.

8. கொலைவன் - கொல்லுதற்றொழில்செய்பவன்; "கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை" (மணி.25 : 174); கலித். 12 - 1, 103 : 15, 147 : 25.

10. மு. முருகு.104. 14. புறநா.65 : 1.

15. "கண்ணறுத் தியற்றிய தூம்பு" (பதிற். 41 : 3); "ஓய்களிறெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பி னுயிர்க்கும், அத்தம்" (அகநா. 111 : 8 - 10); "கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்" (மலைபடு.6)

17. "நொடிதரு பாணிய பதலையும்" (மலைபடு.11) என்பதும், "மாத்திரையைச் சொல்லுந் தாளத்தையுடைய ஒருகண்மாக்கிணையும்" என்னும் அதனுரையும் ஈண்டு அறியற்பாலன.

18. மாக்கோல்: "வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்" (குறுந். 298); "தேமுதிர் சிமையக் குன்றம் பாடும், நுண்கோ லகவுநர் வேண்டின்" (அகநா.208 : 2 - 3)

14-8. மலைபடு.2 - 11.

20. "துறைபல முற்றிய" (மலைபடு.40) என்பதன் உரையைப் பார்க்க.

22. ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்துநின்ற சொற் பொருளையே உணர்த்தி நிற்றற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 32, ந.

21-2. புறநா.150 : 22 - 3; "சான்றோர், புகழுமுன்னர் நாணுப, பழியாங் கொல்பவோ காணுங் காலே" (குறுந். 252); "தம்புகழ் கேட்டார்போற் றலைசாய்த்து மரந்துஞ்ச" (கலித். 119 : 9); "பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும்" (திரி. 6)

25. புறநா. 399 : 29; "ஒன்றியான் பெட்டா வளவையின்" (பொருந.73); "நீசில மொழியா வளவை" (சிறுபாண். 235)

28. "தாவி னன்பொன் றைஇய பாவை" (அகநா.212)

31-2. கொல்லிமலை ஓரிக்குரியதென்பது, "கொல்லி யாண்ட வல்வி லோரி" (புறநா.158 : 5), "ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி", "வல்வி, லோரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி" (அகநா.208 : 21 - 2, 209 : 14 - 5) என்பவற்றாலும் விளங்கும்.

மு. ‘வேழம் வீழ்த்த விழுத்தொடைப்பகழி யென்னும் புறப்பாட்டு, இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக்கூறியது' (தொல். புறத்திணை. சூ. 36, .)

(152)


1. "ஏழேயேழே நாலேமூன் றியலிசை யிசையில்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்" (தேவாரம், திருத்தாளச்சதி), "பண்களுக்கு இன்றியமையாத மூவேழ்திறம்" (சிலப். 5 : 35 - 7, அடியார்) என்பனவும் ஈண்டறியத்தக்கன.

2. பொருந 55, ந.