178
கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
காலியற் புரவி யாலு மாங்கண்
மணன்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணா ராயினுந் தன்னொடு சூளுற்
5றுண்மென விரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோ வின்சா யலனே வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பிற்
கள்ளுடைக் கலத்த ருள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
10அஞ்சி நீங்குங் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே.

திணை - வாகை; துறை - வல்லாண்முல்லை.

பாண்டியன் கீரஞ்சாத்தனை (பி - ம். பாண்டிக்குதிரைச்சாக்கையனை) அவர் பாடியது.

(இ - ள்.) கம்பத்தை வெறுத்துநெட்டுயிர்ப்புக் கொள்ளும் யானையோடு பந்தியைவெறுத்துக் காற்றுப்போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும்அவ்விடத்து இடுமணல் மிக்க முற்றத்தின்கட் புக்கசான்றோர் அப்பொழுது உண்ணாராயினும் தன்னுடனேசார்த்திச் சூளுற்று உண்மி னென்று அவரை வேண்டிக்கொள்ளும்பெரிய பெயரையுடைய சாத்தன் எம்போல்வாரிடத்துஇனிய மென்மையையுடையன்; இங்ஙனம் மெல்லியனாயினும்விரும்பாதார் எறியும் படைக்கலம் தம்மிற்கலந்தஅஞ்சத்தக்க போரின்கண் வீரபானத்தையுடைய கலத்தினராய்அதனையுடைய செருக்கான் ஊர்க்குள்ளே யிருந்து சொல்லியவீரம் மேம்பட்ட வார்த்தை யைப் போரின்கண்மறந்த சிறிய பேராண்மையை யுடையோர் போர்க்களத்துஅஞ்சிப் புறங்கொடுத்து ஓடுங்காலத்து அவர்க்கு அரணாகத்தான் தன் வலியான் முந்துற்று நிற்பன்-எ - று.

நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும்,பின் அதனை மறத்தலாற் சிறுமையுமுடைமையின், சிறுபேராளரென்றார்.

‘நெடுமொழி மறந்து’ என்பதூஉம்பாடம்.


(கு - ரை.) 1. புறநா. 23 : 1 - 2.

2. “காலியக் கன்ன கதழ்பரிகடைஇ” (மதுரைக். 440)

1 - 2. “பணைநிலைப் புரவி யாலுமோதையும்” (சிலப். 13 : 147); “பணைநிலைப்புரவி பலவெழுந் தால” (மணி. 7 : 117)

4 - 5. “உண்ணா நோன்பி தன்னொடுசூளுற், றுண்மென விரக்கு மோர் களிமகன்” (மணி.3 : 102 - 3)

3 - 5. “இருந்தோம்பியில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மைசெய்தற் பொருட்டு” (குறள், 81)

7. மயங்கிய ஞாட்பு : புறநா. 343 :17; “மயங்கமர்” (கலித். 31); “கழுமியஞாட்பு”(களவழி. 11)

9. நெடுமொழி : புறநா. 54 : 9, 376 :22. “சொல்லுத லியார்க்கு மெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்” (குறள், 664)

11. “அழிபடை தாங்கல்” (சிறுபாண்.211)

9 - 11. புறநா. 54, 170 : 14 - 7.

(178)