331
கல்லறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தன னாயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
5கல்லா விடையன் போலக் குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்ல னுள்ளது
தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள்
நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும்
இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில
10வரிசையி னளிக்கவும் வல்ல னுரிதினிற்
காவன் மன்னர் கடைமுகத் துகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லனவன் றூவுங் காலே.

(பி - ம்.) 8 ‘நீணெடு பந்தருண்' 13 ‘தூஉவும்'

திணையும் துறையும் அவை.

உறையூர் முதுகூத்தனார் (பி - ம். உறையூர் முதுகூற்றன்)


(கு - ரை.) 1. "வல்லூற் றுவரி தோண்டி" (பெரும்பாண். 97 - 8); "குடம்புகாக் கூவற் கொடுங்கானம்" (சிலப்.29 : காவற்பெண்டு சொல்.) கூவல் - கிணறு.

2. விற்போராகிய உழவுத்தொழிலால் வாழும் வாழ்க்கையையுடைய தலைவன் ; "வில்லுழு துண்மார்" (புறநா.170). மதவென்பது வலியை யுணர்த்துவதோருரிச்சொல் : மதவலி - மிக்க வன்மையுடைய தலைவன் ; "மதவலி விடுப்ப வேகி" (சீவக.204)

3. மிக்க வறுமையையுற்றானாயினும்.

4. ஞெலியும் - கடையும்.

4 - 5. "இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து" (புறநா. 324 : 11) ; "இடையன்.............ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச், செந்தீ" (பெரும்பாண்.175 - 8)

8. பந்தரில். முறை - வரிசை ; "முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை" (புறநா.325 : 6)

9. மகடூஉ - மனைவி.

6 - 9. "குடநீரட் டுண்ணு மிடுக்கட் பொழுதும், கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும், கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி, மாதர் மனைமாட்சி யாள்" (நாலடி.382)

9-13. புறநா. 334 : 7 - 11.

(331)