147
கன்முழை யருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வா னின்னுறை தமியள் கேளா
நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும்
5அரிமதர் மழைக்க ணம்மா வரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்
புதுமலர் கஞல வின்று பெயரின்
அதுமனெம் பரிசி லாவியர் கோவே.

(பி - ம்.) 1 ‘கன்முகையருவி’

திணையும் துறையும் அவை.

அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.

(இ - ள்.) கன்முழைக்கணின்றும் விழும் அருவியையுடைய பல மலைகளை அரிதிற்கழித்துச் சிறிய யாழைச் செவ்வழியென்னும்பண்ணை வாசிக்கும்படியாகப் பண்ணி வாசித்துவந்ததற்குக் கார்காலத்து மழையினது இனியதுளி வீழ்கின்ற ஓசையைத் தமியளாகக் கேட்டு நெருநற்று ஒரு பக்கத்துத் தனிமை கொண்டிருந்த அரிபரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமைநிறத்தினையுமுடைய அந்த அரிவையது நெய்யால் துறக்கப்பட்ட மைபோலும் கரிய மயிரை ஒப்பமிடப்பட்ட நீலமணியினும் மாசறக் கழுவிச் செவ்விமலர் நெருங்கும் பரிசு இன்று வருவையாயின், அதுவாகும் எம்முடைய பரிசில்; ஆவியருடைய வேந்தே!-எ - று.

உறை - துளி; என்பது ஆகுபெயரால் துளியினோசையை. மன்: அசை.

சீறியாழ் செவ்வழிபண்ணி வந்ததற்கு அரிவைகூந்தல் புதுமலர் கஞலும்படி அவள்பால் எம்மொடும் வரின் எம் பரிசில் அதுவெனக் கூட்டுக.

நெய்பூசுதலோடு பேணுதலைத்துறந்தவெனினும் அமையும்.
செவ்வழிபண்ணிவந்தது, புதுமலர்கஞலவென்று இயைத்துரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 2. புறநா. 144 : 2, 146 : 3. வந்ததை - உருபு மயக்கம்.

3. "முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி, இன்ப லிமிழிசை யோர்ப்பனள்" (முல்லைப்.87 - 8)

6. "வாச வெண்ணை யின்றி மாசொடு, பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு (பெருங். 4. 7 : 103 - 4)

6-7. பரி.10 : 89. 8. புறநா. 194 : 3.

6-8. புறநா.146 : 9 - 10; "மாசற மண்ணுற்ற மணியேசுமிருங்கூந்தல், வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல்" (கலித். 77 : 16 - 7); பெருங். 1. 40 : 158, குறிப்புரை.

9. "ஆவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனும்" (சிறுபாண். 86 - 7)

8-9. ‘புதுமலர் ... கோவே: இதனுள் மன்னென்பது ஆமென்பது குறித்து நின்றது' (தொல்.இடை. சூ. 4,ந., தெய்வச்.); மன்னென்பது பெயர்ச்சொல்லை அடுத்து வந்ததற்கு மேற்கோள்; நன்.சூ. 419, மயிலை.

மு.கைக்கிளைவகைப் பாடாண்பாட்டிற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 35, ந.

(147)