238
கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்
பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்
5காடுமுன் னினனே கட்கா முறுநன்
தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே
தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே
ஆளில், வரைபோல் யானையு மருப்பிழந் தனவே
10வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப
எந்தை யாகுல வதற்பட லறியேன்
அந்தோ வளியேன் வந்தனென் மன்ற
என்னா குவர்கொலெற் றுன்னி யோரே
மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின்
15ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக்
கண்ணி லூமன் கடற்பட் டாங்கு
வரையளந் தறியாத் திரையரு நீத்தத்
தவல மறுசுழி மறுகலிற்
றவலே நன்றுமற் றகுதியு மதுவே.

(பி - ம்.) 11 'யாகுத லதற்பட'

திணையும் துறையும் அவை.

வெளிமான் துஞ்சியபின் அவர் பாடியது.

(இ - ள்.) பிணமிட்டுப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்த புறத்தேயிருந்த செவி சிவந்த கழுகின்சேவலும் பொகுவலென்னும் புள்ளும் அஞ்சாவாய் வாய்வலிய காக்கையும் கோட் டானும் கூடிப் பேயினத்துடனே தாம் விரும்பியவழியே இயங்கும் சுடு காட்டைத் தலைப்பட்டான், வீரபானத்தைக் காமுறுவான்; அவனுடைய வளைகழிக்கப்பட்ட உரிமை மகளிரைப்போலப் பழைய அழகு தொலைந்து பாடுவாரது சுற்றமும் ஒளிமழுங்கின; தொகுதிகொண்ட முரசங்களும் கண்கிழிந்தன; பாகர்முதலாயின ஆளில்லாத மலைபோன்ற யானைகளும் மருப்பிழந்து விட்டன; இவ்வாறு வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்துபாட்டை எய்துவிப்ப என் இறைவன்........அவ்விறந்து பாட்டிலே படுதலை அறியேனாய் ஐயோ! அளித்தலையுடையேன் வந்தேன்; நிச்சயமாக என்ன துயரமுறுவர்கொல்லோ என்னையடைந்த சுற்றத்தார்? மழையையுடைய இரவின்கண் மரக்கலம் கவிழ்ந்தகாலத்துப் பொறுத்தற்கரிய துன்பமுற்ற நெஞ்சுடனே ஒருபெற்றிப்படக் கண்ணில்லாத ஊமன் கடலின்கண் அழுந்தினாற்போல எல்லையளந்தறியப்படாத திரையரிதாகிய வெள்ளத்தின்கண் துன்பமாகிய மறுசுழியின்கட் பட்டுச் சுழலுமதனின் இறந்துபடுதலே நன்று; நமக்குத் தக்க செய்கையும் அதுவே-எ - று.

யான் அது செய்யப்பெற்றிலேனென்னும் நினைவிற்று.

மன் கழிவின்கண் வந்தது.

வெருவா வழங்குமென இயையும்.

'முரசும் கண்கிழிந்தன, யானையும் மருப்பிழந்தன' என்ற கருத்து: அவற்றால் தொழில்கொள்வாரின்மையின், அவை பயனிழந்தனவென்பதாம்.


(கு - ரை.) 1. புறநா. 228 : 12, குறிப்புரை.

2. செவிசெஞ்சேவல் : புறநா. 370 : 26, 373 : 38; அகநா. 77.

1-2. 'கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த, செவிசெஞ் சேவலும்: என முறை மயங்கி வந்ததாலெனின், ஆண்டுச் செஞ்செவியென்பது மொழிமாறி நின்றது' (தொல். கிளவி. சூ. 26, தெய்வச்.)

3. மு. புறநா. 362 : 17.

1-3. செய்யுட்கண் வண்ணச்சினைச்சொல் அடை சினை முதலெனு மூன்றும் முறைமயங்கி வந்ததற்கு மேற்கோள் (தொல். கிளவி. சூ. 26, சே.,ந.; இ. வி. சூ. 314, உரை); ‘கவிசெந்தாழிக்......கூகையுங் கூடி: எனவருவன,

கொம்புகூர்மாடு, மடல்விரிதாழை என்றாற்போல வருதலின், உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் என்னுஞ் சூத்திரத்துள் அஃறிணையொடு சார்த்தின் அஃறிணை முடிபினவாமென அமைத்த தன்பாற்படுமென்க' (நன். வி. சூ. 403)

6. புறநா. 261 : 18 - 9, 280 : 14.

8. முரசங் கண்கிழிதல் : புறநா. 229 : 19.

10-12. ‘வெந்திறற் கூற்றம்......அந்தோவளியேன் வந்தனென் மன்ற: என்றவழி அந்தோவென்பது கேடுகுறித்து நின்றது' (தொல். இடை. சூ. 33,தெய்வச்.)

14. மரம்: பு. வெ. 111, உரை.

18-9. "சங்கடத்திற் சாவதே நன்று" (தனிப்பாடல்)

(238)