215
கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை
5அவரை கொய்யுந ரார மாந்தும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாராரென்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது,

(இ - ள்.) கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெளிய தயிரின்கட் பெய்து இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார் நிறையவுண்ணும் தென்திக்கின்கட் பொதியின்மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும் சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவார், என்னுயிரைப் பாதுகாப்போனை; அவன் எமக்குச் செல்வ முடைய காலத்து நிற்பினும் யாம் இன்னாமை யுறுங்காலத்து ஆண்டு நில்லான்-எ - று.

மன் : அசைநிலை.


(கு - ரை.) 1. “வரகி னவைப்புமா ணரிசி” (அகநா. 394 : 3) கவைக்கதிர் வரகு : மலைபடு. 112 - 3, பெருங். 1. 49 : 105.

2. “தாதெரு மறுகு” (நற். 343 : 3; அகநா. 165 : 4)

3. “வேளை வெண்பூ” (புறநா. 23 : 21)

3-4. “தயிர்மிதி மிதவை” (அகநா. 340 : 15)

6. மு. புறநா. 33 : 7.

(215)