185
கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே
உய்த்த றேற்றா னாயின் வைகலும்
5பகைக்கூ ழள்ளற் பட்டு
மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே.

(பி - ம்.) 1 ‘ஞாலத் தியங்கும்’

திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.

(இ - ள்.) உருளையையும் பாரையும்கோத்து உலகின்கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான்அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின் ஊறுபாடில்லையாய்வழியை இனிதாகச் செல்லும்; அவன் அதனை இனிதாகச்செலுத்துதலைத் தெளியமாட்டானாயின் அது நாடோறும்பகையாகிய செறிந்த சேற்றிலே அழுந்தி மிகப்பலதீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும்-எ - று.

இஃது, உலகாளுமுறைமை கூறுதலையுட்கொண்டுசகடம்செல்லுறு மாற்றைக் கூறினமையின், நுவலாநுவற்சியென்னும்அலங்காரமாயிற்று; ஒட்டென்று கூறுவாரும் உளர்.

அன்றி இதற்கு உலகத்தின்கண்ணேஉலகியற்கையை நிறுத்தி அதனோடு ஞாலத்தின்கண்ணேசெலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச்செலுத்துவோன் மாட்சிமைப்படின் தனக்கு ஓரிடையூறுமின்றாகிநெறி முறைமையே நடக்கும்; அதனைச் செலுத்துதல் தெளியானாயின்அச்சாகாடு நாளும் மறுதலையென்னும் செறிந்தஅள்ளலிலே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ்வாழ்வார்க்கும்மிகப்பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலும் தருமெனவும் பொருளுரைப்பர்; இப்பொருட்குப் பாரென்றது,உலகியற்கையை.

கால் - உருளை.


(கு - ரை.) 1. பார் - பண்டியின்உறுப்புக்களுள் ஒன்று.

2. காவற்சாகாடு கைப்போன் : புறநா.60 : 7 - 9, 256 : 2; ‘அவையாறனுள்ளும் காவற்சாகாடு கைத்தற்கண்அவ்வரசர்க்கு இணையாய அமைச்சனதியல்பு’ (குறள்,63-ஆம் அதி. அவ.) உகைப்போன் - செலுத்துவோன்.

2 - 6. கலித். 129 : 3.

மு. “ஆர்வலஞ் சூழ்ந்த வாழியலைமணித் தேரை வல்லா, னேர் நிலத் தூரு மாயினீடுபல் காலஞ் செல்லு, மூர்நில மறித றேற்றா தூரு மேன்முறிந்து வீழுந், தார்நில மார்ப வேந்தர் தன்மையுமன்னதாமே” (சீவக. 2909)

(185)