208
குன்று மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
டீங்கனஞ் செல்க தானென வென்னை
5யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன் பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது இதுகொண்டுசெல்கென்று அவன் பரிசில்கொடுப்பக் கொள்ளாது அவர் சொல்லியது.

(இ - ள்.) குன்றுகளும் மலைகளும் பல பின்கழிய வந்தேன் யான் பரிசில்கொண்டேனாய்ப் போதற்கெனச் சொல்லி நின்றவென்னை அன்புற்றருளி இப்பொருளைக் கொண்டு இவ்வாறு போக, தானெனச்சொல்ல, என்னை எப்பரிசறிந்தான் பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்? என்னை யழைத்துக்காணாதே தந்த இப்பொருட்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன்; விரும்பித் தினைத்துணையளவாயினும் நன்று, அந்தப் பரிசிலரது கல்விமுதலாகிய பொருந்திய எல்லையையறிந்து கொடுத்து விடின்-எ - று.

ஈங்கனஞ் செல்கவென்றது, காணாதே அவன் சொல்லிவிட்ட வார்த்தையை.

அவர்துணையளவறிந்து பேணி நல்கினர் விடின், தினையளவாயினும் இனிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

யான் தரங்கெடப் பொருள் கொடுபோமவன் அல்லேன்; அவனாயின் இதுவும் கொடுபோவன்; நீ எனக்கு தரமறிந்து தரவேண்டுமென்பதாம்.

‘அவர் துணையளவு’ எனத் தம்மை உலகின்மேலிட்டுக் கூறினார்.


(கு - ரை.) 1-2. “சேட்சென்று, நல்குவார் கட்டே நசை” (நாலடி. 263)

9. புறநா. 121 : 3.

7-9. புறநா. 159 : 22 - 5, 205 : 1 - 2.

மு. பரிசில்நிலை கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந.

(208)