61
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்
5புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர்
10குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி
சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனிற்
15றாமறி குவர்தமக் குறுதி யாமவன்
எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர்
வாழக் கண்டன்று மிலமே தாழாது
திருந்தடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்ட லதனினு மிலமே.

திணை-வாகை; துறை-அரசவாகை.

சோழன் இலவந்திகைப்பள்ளி (பி-ம், காலேகப்பள்ளி)த் துஞ்சிய நலங்கிள்ளி 1சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

(இ - ள்.) கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையும் உடைய கடைசியர் சிறிய மாட்சிமையுடைய நெய்தலை ஆம்பலுடனே களையும் மலங்கு பிறழ்கின்ற செய்யின்கண்ணே தளம்புதுணித்து இடப்பட்ட பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியைப் புதிய நெல்லினது வெள்ளி சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைப்பக்கம் விம்மவுண்டு நெடிய கதிரையுடைய கழனியினிடத்துச் சூட்டை இடுமிடம் அறியாது தடுமாறும் வலிய கையையுடைய உழவர் புல்லியதலையையுடைய சிறுவர் தெங்குதரும் பெரிய பழத்தை வெறுப்பின், தந்தையருடைய தலை குவியாமல் இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய போரின்கண்ணே யேறி உகைத்தெழுந்து வளவிய கோட்புக்க பனையினது பழத்தைத் தொடுதற்கு முயலும், நாடோறும் புதுவருவாயையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனாகிய வேல்விளங்கும் பெரியகையினையும் இயற்றப்பட்ட தேரினையு முடைய சென்னியது இந்திரவிற்போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோருளராயின், தாமறிகுவர் தமக்குற்ற காரியம்; யாங்கள், அவனுடைய கணையமரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர் வாழக் கண்டதும் இலமே; விரைய அவனது திருந்திய அடியை அடையவல்லோர் வருந்தக்காண்டல் அவ்வாழக் கண்டதனினும் இலம்-எ-று.

தளம்பென்றது சேறுகுத்தியை.

வழுவின்று மலைதலாவது வெளிப்பட நின்று மலைதல்.


(கு - ரை.) 1. தழை-ஒருவகையுடை; அஃது ஆம்பல் முதலிய மலர்களினாலேனும், தளிர்களினாலேனும், விரவிய இவ்விரண்டினாலேனும் ஆக்கப்படுவது; இதனை, புறநானூறு,. 116 : 1 - 2. 248 : 1 - 2 -ஆம் அடிகளாலும், “முடித்த குல்லை யிலையுடைய நறும்பூச், செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு, சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை.......உடீஇ” (முருகு. 201-3) என்னும் அடிகளாலும் உணர்க.

2. நெய்தலும் ஆம்பலும் வயல்களிற் களைகளாக முளைத்தவை.

3. மலங்குமிளிர் செறு : சிலப். 10 : 80, மலங்கு-ஒருவகை மீன். தளம்பு-சேறுகுத்தும் ஒருவகைக் கருவி.

5. கண்ணுறை-மேலீடு; வியஞ்சனம்; மேலீடு என்றதனால் சோற்றின் மேலிட்டு உண்ணப்படுவது எனக்கொள்க.

6. ‘விலாப்புடை மருங்குல் விசிப்ப மாந்திய உழவர்’ என இவ்வடியை உரைநடையிலிட்டு எழுதுவர் பரிமேலழகர்; பரி. 7 : 38 - 9. உரை.

7. சூடு : புறநா. 13 : 11.

11. செழுங்கோள்-செழுவிய காய்க்குலையையுடைய.

14. சிலைத்தார் : புறநா. 10 : 9 - 10, 36 : 12, குறிப்புரை. “திருவிற்றான் மாரி கற்பான் றுவலைநாட் செய்வதேபோல், உருவிற்றாய்த் துளிக்குந் தேற லோங்குதார்” (சீவக. 2070)

13. புறநா. 10 : 5 - 6. திருந்தடி : புறநா. 7 : 2, உரை.

(61)


1.‘சென்னி’ எனத் தலைவன் பெயரில் ஒரு பகுதி 13-ஆம் அடியில் வந்துள்ளது.