38
வரைபுரையு மழகளிற்றின்மிசை
வான்றுடைக்கும் வகையபோல
விரவுருவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
5நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ
நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
10நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த
எம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோரும்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும்
15கடவ தன்மையிற் கையற வுடைத்தென
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

அவன் ‘எம்முள்ளீர் எந்நாட்டீர்?’ என்றாற்கு ஆவூர்மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.) மலையையொக்கும் இளங்களிற்றின்மேல் ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டை யுடையனபோல விரவின பலநிறத்தை யுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும் பரந்த படையையுடைய விறல் வேந்தே! நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க, நீ அருளிப்பார்க்குமிடம் பொன்பொலியச் செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாகவேண்டினும், வெளிய திங்களின்கண்ணே வெயிலுண்டாகவேண்டினும் நீ வேண்டிய பொருளை உண்டாக்கும் வலியையுடையையாகலின், நினது நிழற்கண்ணே பிறந்து நினது நிழற்கண்ணே வளர்ந்த எமது நினைவெல்லை சொல்ல வேண்டுமோ? வேண்டாவன்றே; இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக்காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும் தாம் செய்த நல்வினை யாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவதல்லது, செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும் வறியோர் செல்வமுடையோர்பாற் சென்றிரத்தலும் ஆண்டுச் செய்யக்கடவதல்லாமையான், அது செயலறவுடைத்தெனக் கருதி, அவ்விடத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான், நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; பகைவர்தேயத்திருந்தும், நின்னாடு நின்னையுடைத் தென்று கருதி ஆதலால் - எ - று.

மற்று : அசை.

வேந்தே! நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலையாகலின், விண்ணுல கத்து நுகர்ச்சி ஈண்டுங்கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும், பரிசிலர், நின் நாடு நின்னையுடைத்தென்று நின்நாட்டையுள்ளுவர;் ஆதலான், நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த எம்மளவு எவனோவென மாறிக்கூட்டுக.


(கு - ரை.) 1. இவ்வடி முதற்கு முதலேவந்த உவமைக்கும் (தொல்.உவம. சூ. 6, பேர்.) ‘ஒப்பு’ புறப்பொருட்கண்வந்ததற்கும் (தொல்.பொருளியல், சூ. 53, ந.) ‘மழ’ என்னும் உரிச்சொல் இளமைப்பொருளில் வந்ததற்கும் (தொல்.உரி. சூ. 15, சே.; சூ. 14, ந.; இ. வி.சூ. 281, உரை.) மேற்கோள்.

4. வியலென்னும் உரிச்சொல் வியனென்று திரிந்துநிற்றற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 66, ந.

5 - 6. புறநா.239 : 4 - 5, குறிப்புரை; “மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட, நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப” (பெரும்பாண்.423 - 4)

7 - 8. புறநா.30 : 1 “அகப்படு பொறியி னாரை யாக்குவாரியாவ ரம்மா, மிகைப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ, நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுத லுண்டோ, பகைக் கதிர்ப்பருதி சந்து மாலியும் பயத்த லுண்டோ” (வளையாபதி)

“இனப்பொருளைச் சுட்டுதலன்றிப் பண்படுத்து வழங்கப்படும் பெயர் வழக்குநெறியல்ல செய்யுணெறி யென்றவாறு; உ - ம். ‘செஞ் ஞாயிற்று......வேண்டினும்’ எனவரும்; பல பொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒருபொருட்குச் சிறந்த பண்பான் விசேடிக்கப்படுவது; ஞாயிறு திங்களென்பன பொதுச்சொல் அன்மையிற் செஞ்ஞாயிறென்றும் வெண்டிங்களென்றும் விசேடிக்கப்படாவாயினும், செய்யுட்கண் அணியாய் நிற்றலின் அமைக்கவென்றார்”, “செஞ்ஞாயிற்று நிலவு..... வெயில் வேண்டினும் : என இவை கருஞாயிறும் கருந்திங்களுமாகிய இனமின்மையின் விசேடிக்கப்படாவாயினும் செய்யுட்கு அணியாய் நிற்றலின் அமைத்தார்” (தொல். கிளவி.சூ. 18, சே.; ந.); செம்மை வெண்மை, இங்கே இனமில்லாதவற்றிற்கு அடையாக வந்தனவென்பர்; நன்.சூ. 400, மயிலை.;நன்.சூ. 401, வி.; இ. வி.சூ. 312, உரை; பிரயோக.23.

12 - 5. ஈதல் ஏற்றல் முதலியன இல்லாமையால் தேவருலகம் அவ மதிக்கப்படுதலை, “ஈண்டுச் செய்வினை யாண்டுநுகர்ந்திருத்தல், காண்டகு சிறப்பினுங் கடவுள ரல்ல, தறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர், நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர், யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக், கிறைவ னாகிய பெருவிறல் வேந்தே” (மணி.14 : 38 - 43), “ஈவாரு மேற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மையராதலின் (ஒப்புரவு) புத்தேளுலகத்து அரிதாயிற்று”, “ஈவாருங் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்” (குறள்.213, 1058, பரிமேல்.) என்பவற்றாலும் உணர்க.

மு.புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டிற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 27, ந.
நீ உடன்று நோக்குமென்பது முதலியவற்றால் அரசனது இயல்பைக் கூறினமையின் இச்செய்யுள் இயன்மொழியாயிற்று.

(38)