179
ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை
மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
5திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்
படைவேண்டுவழி வாளுதவியும்
வினைவேண்டுவழி யறிவுதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத்
தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத்
10தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கு நற்போர்த்
திருந்துவே னாகற் கூறினர் பலரே.

திணையும் துறையும் அவை.

நாலைகிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் (பி - ம்.வடம நெடு நத்தனார்; வடமநெடுந்தச்சனார்) பாடியது.

(இ - ள்.) உலகத்தின்மேல் வண்மையுடையோர்இறந்தாராகப் பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனதுஇரத்தலையுடைய மண்டையை ஏற்கும் பரிசு இட்டு மலர்த்தவல்லார்யாரென்று கேட்டலின், தன்னொடு மாறுபட்டோரது வலித்துப்பிணிக்கப்பட்ட முரசத்தோடு மண் பலவற்றையும் கொண்டதிருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன், அவனுக்குப் படைவேண்டியவிடத்துவாட்போரை யுதவியும் அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலோடு நின்று அறிவு உதவியும் இவ்வாறு வேண்டுவன அவ்வரசனிடத்து உதவித் தான் பூண்ட நுகம் ஒருபாற்கோடித் தளராமற் செலுத்தும் பகடுபோல ஆண்மையினும் சூழ்ச்சியினுந் தளராத ஆண்மைக்கூறுபாடு பொருந்திய ஊக்கத்தினையும் தோலாத நல்ல புகழையுமுடைய நாலைகிழவன்,பருந்தினது பசிதீர்க்கும் நல்ல போரைச் செய்யும்திருந்திய வேலையுடைய நாகனைப் பலரும் சொன்னார்-எ- று.

பருந்து பசிதீர்க்கும் வேலென இயையும்.


(கு - ரை.) 1 - 3. புறநா.103 : 3,குறிப்புரை.

2. ஏலாது - ஒரு பொருளையும் ஏற்றுக்கொள்ளாமல்.

4 - 5. “நிலந்தந்த பேருதவிப்,பொலந்தார் மார்பி னெடியோன்” (மதுரைக்.60 - 61); “நிலந்தரு திருவிற் பாண்டியன்” தொல்.சிறப்புப்.

6 - 8. “முறைவேண்டு நர்க்குங்குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி” (பெரும்பாண். 443 - 4)

10. தோலா நல்லிசை :புறநா.56 :10. (நாலை - ஓரூர்)

(179)