157
தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தானா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தின னாகலும்
வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்
5நும்மோர்க்குத் தகுவன வல்ல வெம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பிற் கொலைவேற்
கோடற் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதி னினந்தலை மயங்கிக்
10கட்சி காணாக் கடமா னல்லேறு
மடமா னாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்போத் தோர்க்கும்
பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே.

(பி - ம்.) 11 ‘பயிரழைப்பின்’, ‘பயிர்ப்பழைப்பின்’, ‘பயிர்பழைப்பின்’

திணையும் துறையும் அவை.

ஏறைக்கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.

(இ - ள்.) தனக்குச் சிறந்தோர் தன்னைப் பிழைப்பின் அது பொறுத்தலும், பிறருடைய மிடிமைக்குத் (மிடிமை - தரித்திரம்) தான் நாணுதலும், படையிடத்துப் பிறர்பழிக்கப்படாத வலியையுடையனாதலும், அரசுடைத்தாகிய அவைக்களத்தின்கண் மேம்பட்டு நடத்தலும் நும்மால் மதிக்கப்படுந் தலைவர்க்குத் தகுவனவல்ல; எம்முடைய தலைவன், வில்லைப் பூரணமாக வலித்தலான் அகன்ற மார்பினையும் கொல்லும் வேலினையும் காந்தட் பூவாற் செய் கண்ணியினையுமுடைய குறவர்க்குத் தலைமகன் இயங்குகின்ற முகிலைத் தனது உயரத்தால் தடுக்கும் பயன் பொருந்திய மலையினது உச்சிக்கண் ஞாயிறு படுகின்ற காலத்தில் இனத்தினின்றும் தலைமயங்கித் தான்சேரும் சேர்க்கையைக் காணாத காட்டின்கண் மானினது நல்ல கலை மடப்பத்தினையுடையமானாகிய இளம்பிணையைப் பயிரான் அழைப்பின் அவ்வோசையை விடராகிய முழையின்கட் கிடக்கின்ற பெரும்புலியாகிய புகர் நிறத்தினையுடைய ஏறு செவிதாழ்த்துக் கேட்கும் பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக் கோனுக்குப் பொருந்தும்-எ-று.

‘சிலைசெல மலர்ந்த மார்பு' என்பதற்கு மலைதோற்க மலர்ந்த மார்பெனினும் அமையும். தலைமயங்கி யென்பதனுள், தலை அசைநிலை.


(கு - ரை.) 1. "அன்பெனப் படுவது தன்கிளை செறாமை" (கலித்.133); "நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக், கண்கண்ட குற்ற முளவெனினுங் காய்ந்தீயார், பண்கொண்ட தீஞ்சொற் பணைத்தோளாய்! யாருளரோ, தங்கன்று சாக்கறப் பார்" (பழ.16); "குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை" (கொன்றைவேந்தன்,18); "குற்றமது பார்க்குங்காற் சுற்ற மில்லை" (வில்லி. பாரதம், கிருட்டினன்றூது. 17)

2. கையறவு - செயலறுதல்.

7. "கோடல், நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ" (நெடுநல். 5 - 6); "மலைச்செங் காந்தட் கண்ணி" (நற்.173)

8. புறநா.166 : 32, 200 : 4.10. மு.புறநா.202 : 2.

9. எல் - ஒளி; சூரியனுக்கு ஆகுபெயர்.

11. "மான்மறி விழுந்தது கண்டுமன மயங்கிப், பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி" (மணி.23 : 115 - 6)

12. ஓர்க்கும்: புறநா.68 : 17, குறிப்புரை; 280 : 6; கலித். 46 : 13; முருகு. 96; முல்லை. 88; மலைபடு.23.

(157)