22
தூங்குகையா னோங்குநடைய
உறழ்மணியா னுயர்மருப்பின
பிறைநுதலாற் செறனோக்கின
பாவடியாற் பணையெருத்தின
5தேன் சிதைந்த வரைபோல
மிஞிறார்க்குங் கமழ்கடாத்
தயறுசோரு மிருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
10பாஅனின்று கதிர்சோரும்
வானுறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநிழலான்
வாண்மருங்கிலோர் காப்புறங்க
அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த
15ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா வுலக்கையாற்
கலிச்சும்மை வியலாங்கட்
20பொலந்தோட்டுப் பைந்தும்பை
மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க
வாய்காவாது பரந்துபட்ட
25வியன்பாசறைக் காப்பாள
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்பார்த்தும்
ஓங்குகொல்லியோ ரடுபொருந
வேழநோக்கின் விறல்வெஞ்சேஎய்
30வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே
நிற்பாடிய வலங்குசெந்நாப்
பிற்பிறரிசை நுவலாமை
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ
மாந்தரஞ் சேரலிரும்பொறை யோம்பிய நாடே
35புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந்
தினிது கண்டிசிற் பெரும முனிவிலை
வேறுபுலத் திறுக்குந் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.

(பி - ம்.) 27 ‘கடும்பருத்தும்’

திணையும் துறையும் அவை; துறை - இயன்மொழியுமாம்.

1சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைக் குறுங்கோழியூர்கிழார் பாடியது.

(இ - ள்.) அசைந்த பெருங்கையுடனே தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையையுடையனவும் அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்றுமாறு பட்டொலிக்கும் மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும் பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம்பொருந்திய பார்வையையுடையனவும் பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும் தேனழிந்த (பி - ம். தேனழித்த) மலைபோலத் தேனீயொலிக்கும் மணம் நாறும் மதத்துடனே புண்வழலை வடியும் பெரிய தலையையுடையனவுமாகிய வலிமிக்க இளங்களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்றநிலையிலே நின்று அசையப் பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற வானத்தின்கண்ணே தங்கும் திங்கள்போலும் முத்தமாலையையுடைய வெண்கொற்றக்குடையினது நிழற்கண்ணே தம்பக்கத்து வாளில்லாதோர் அக்குடையே காவலாக உறங்க அசைந்த 2செந்நெற்கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பாற்கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை விழாவெடுத்துக் கொள்ளப்பட்ட இடம்போல் வேறுவேறாகப் பொலிவு தோன்றக் குற்று அமையாத உலக்கையொலியுடனே மிக்க ஆரவாரத்தையுடைய அகன்றவிடத்துப் பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே மிசையே அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி ஓதத்தையுடைய கடலொலி போலக் கிளர்ந்து பொங்கப் 3படைப்பெருமையாற் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது

பரந்துகிடக்கின்ற அகன்ற பாசறையிடத்துக் காவலாள! மாற்றரசர் பணிந்துதந்த திறையால் தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும் உயர்ந்த கொல்லிமலையோருடைய அடுபொருந! யானையினது நோக்குப்போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே! வாழ்க, பெருமானே! நினது எல்லையில்லாத செல்வம்; நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நாப் பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமற் பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எங்கோவே! மாந்தரஞ்சேரலிரும்பொறை பாதுகாத்த நாடு தேவருலகத்தை யொக்குமென்று பிறர் சொல்லக் கேட்டு வந்து கட்கினிதாகக் கண்டேன்; பெருமானே! முயற்சி வெறுப்பில்லையாய் வேற்றுநாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே சோறுண்டாக நடப்பை; நீ மடியாயாதலான்-எ-று.

கதிர்சோருமதியென இயையும்; கதிர்சோருமென்னும் சினைவினை மதியென்னும் முதலொடு முடிந்தது; கதிர்சோருமாலையென இயைப்பினும் அமையும்.

பாய்நின்றென்று பாடமோதுவாரும் உளர்.

கூரை பொலிவுதோன்றவென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.

செரீஇயென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடுமுடிக்க.

நிலைஇ வழங்கக் காப்புறங்கப் பொலிவுதோன்றப் பெயர்புபொங்க என்னும் செயவெனெச்சங்களும். வாய்காவாதென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்துபட்டவென்னும் பெயரெச்சவினையொடு முடிந்தன.

காப்பாள! பொருந! சேஎய்! பெரும! எங்கோ! பெரும! நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனக் கேட்டுவந்து இனிது கண்டிசின்; நின்படைப்பு வாழியவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க; அன்றி, எங்கோவே! நீ துஞ்சாதபடியாலே, இரும்பொறையோம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனப் பிறர் சொல்லக்கேட்டு நிற்பாடிய அலங்குசெந்நாப் பிறரிசை நுவலாதபடி வந்து இனிது கண்டேன்; நினது படைப்பொடு வாழ்வாயாகவென இயைப்பினும் அமையும்.

இசின் தன்மைக்கண் வந்தது.

சோறுபடநடத்தி யென்பதனை வினையெச்சமாக உரைப்பினும் அமையும்.

உயர்மருப்பினென்பதூஉம,் செறனோக்கினென்பதூஉம், பணையெருத்தினென்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 1. மூன்றாம் வேற்றுமைவிரியைக்கூறும் சூத்திரத்தில், ‘அன்ன பிறவும்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.

வேற்றுமை. சூ. 13, சே.; ஆனுருபு சகார்த்தமாய் வந்ததற்கு மேற்கோள்; பிரயோக.காரக. 16, உரை.

2. ஆன் ஒடுவாதற்கு மேற்கோள்; தொல்.வேற்றுமை. சூ. 13, ந.

1-2. “தூங்கு......மருப்பின என்பன போல்வனவெல்லாம் ஆன் ஒடுவாயின” (இ. வி.சூ. 200, உரை); “தூங்குகையா லோங்குநடைய, உறழ்மணியா லுயர்மருப்பின.....இவை உடனிகழச்சி; ஆன் உருபோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க” (நன். மயிலை.சூ. 296; நன். வி. சூ. 297)

6. யானைமதம் மணமுடையதென்பதையும் அதில் வண்டுமொய்க்கு மென்பதையும், “வரிவண் டார்க்கும் வாய்புகு கடாஅம்” (புறநா.93 : 12 - 3), “ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல்”, “வரிவண், டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்றம், ஆங்கவை விருந்தாற்ற” (கலித்.21 : 2. 66 : 2 - 4), “வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்த்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்” (அகநா.78 : 3 - 4), “பூநாறு கடாஞ் செருக்கி” (மணி.19 : 22),

“புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மத, மணமகள் கதுப்பென நாறும்” (சீவக.1621), “பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு” (கம்ப.வரைக். 6), “விழிமலர்ப்பூ சனையுஞற்றித் திருநெடுமால் பெறுமொழி மீள வாங்கி, வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்ற மாறு மாற்றாற், பொழிமதநீர் விரையேற்றி” (காஞ்சிப்.கடவுள். 5) என்பவற்றால் அறிக.

6-9. “கமழ்கடாஅத், தளறுபட்ட நறுஞ்சென்னிய, வரைமருளு முயர்தோன்றல” (மதுரைக். 44 - 6)

10-12. புறநா.60 : 3 - 12.

15. “கொடி-ஒழுங்கு; ‘கொடிக்கூரை’ என்றார்” (சீவக.1976, ந.)

16. “சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி” (முருகு.283)

20. புறநா.97 : 15; “செய்பொன் வாகை” (மணி.26 : 90)

20-21. அரசர் தமக்குரிய அடையாளப்பூவொடு புறத்திணைப் பூக்களையும் விரவித் தொடுப்பித்துத் தாம் சூடிக்கொள்ளுதலும், வீரர்க்குச் சூட்டுதலும் மரபு; புறநா.76 : 4 - 5, 77 : 2 - 3, 100 : 3 - 6; “குடைநிலை வஞ்சியும்.....வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி” (சிலப்.25 : 141 - 7); “இளவரிக் கவட்டிலை யாரொ டேர்பெறத், துளவிய றும்பையுஞ் சுழியச் சூடினான்” (கம்ப.முதற்போர். 115)

27. கடும்பு - சுற்றம்.

28. “கொல்லிப் பொருந” (பதிற்.73); “முள்ளூர் மன்னர் கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா.209 : 12 : 5), “கொல்லி யாண்ட குடவர் கோவே” (சிலப்.24 : ‘பாட்டுமடை’) என்பவற்றாற் கொல்லிமலை சேர பரம்பரையினர்க்குரித்தாதல் காண்க.

30. படைப்பு - செல்வம்; புறநா.188.

31-3. புறநா.68 : 19; “செருமான வேற்சென்னி தென்னுறந்தையார்தம், பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும், பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம், காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்” (தண்டி.சூ. 21, மேற்.) என்பதும், “இலனென்னு மெவ்வமுரையாமை யீதல்” (223) என்னும் திருக்குறளின்பொருள் விசேடங்களும் இங்கே அறிதற்குரியன.
34-5. “மீக்கூறு மன்ன னிலம்” (குறள்.386) என்பதும், ‘மீக்கூறுதல்:- இவன் காக்கின்ற நாடு பசி பிணி பகைமுதலியவின்றி யாவர்க்கும் பேரின்பந் தருதலின் தேவருலகினும் நன்றென்றல்’ என்னும் அதன் உரையும் இங்கே கருதற்பாலன.

(22)


1. “கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதொரு சாதியும், சேரமானென்பதொரு குடியும், வேழநோக்கினை யுடையானென்பதொரு வடிவும், சேயென்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ் சேரலிரும்பொறை யென்பதொரு சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனை” (குறள், 355, பரிமேல்). இச்செய்யுளின் 29, 34ஆம் அடிகளில் தலைவன் பெயர் அமைக்கப்பெற்றுள்ளது,

2. ஒரு சமயத்தில் கம்பருக்காகச் சடையப்பவள்ளல் விரைவில் வீடொன்று கட்டுவித்து அதனை நெற்கதிரால் வேய்ந்தளித்தமையின் கதிர்வேய் மங்கலமென்று அவ்வீடுள்ள ஊர் பெயர்பெற்றதென்ற பழஞ்செய்தி இங்கே கருதற்குரியது,

3. “தானை, படைத்தகையாற் பாடு பெறும்” (குறள். 768)