17
தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
5கொடிதுகடிந்து கோறிருத்திப்
படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
10அகல்வயன் மலைவேலி
நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவிற்
றண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15நீடுகுழி யகப்பட்ட
பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20நீபட்ட வருமுன்பிற்
பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
25சென்றுபட்ட விழுக்கலனும்
பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
30உடன்றுநோக்கினன் பெரிதெனவும்
வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்
காண்கு வந்திசிற் பெரும வீண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
35தேனிறை கொள்ளு மிரும்பல் யானை
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40வரையா வீகைக் குடவர் கோவே.

(பி - ம்.) 9 ‘காய்த்தாழை’ 12‘றென்கழிமிசைத் தீப்பூவின்’

திணை - வாகை; துறை - அரசவாகை;இயன்மொழியுமாம்.

பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை வலிதிற் போய்க் கட்டிலெய்தினானைக்குறுங்கோழியூர் (பி - ம். குறுங்கோளியூர்) கிழார்பாடியது.

(இ - ள்.) தென்றிசைக்கட் கன்னியும்வடதிசைக்கண் இமயமும் கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும்கடலும் எல்லையாக நடுவு பட்ட நிலத்துக் குன்றும் மலையும்காடும் நாடும் என இவற்றையுடையோர் ஒரு பெற்றிப்பட்டுவழிபாடு கூறத் தீத்தொழிலைப் போக்கிக் கோலைச்செவ்விதாக்கி ஆறிலொன்றாகிய இறையை உண்டுநடுவுநிலைமையைச் செய்து தடையின்றாக உருண்டஒளியையுடைய சக்கரத்தால் நிலமுழுதையும் ஆண்டோரதுமரபைக் காத்தவனே! குலைதாழ்ந்த கோட்புக்க தெங்கினையும்அகன்ற கழனியையும் மலையாகிய வேலியையும்நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும்தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடையகுளிர்ந்த தொண்டியிலுள்ளோருடைய அடுபொருந! யானைபடுக்குங்குழிமேற் பாவின பாவைத் தன் மனச்செருக்காற் பாதுகாவாது ஆழத்தால் நெடிய குழியின்கண்ணேஅகப்பட்ட பெருமையையுடைத்தாகிய மிக்கவலியையுடையகொம்பு முதிர்ந்த கொல்லுங்களிறு அதன் நிலைசரியக்குழியைத்தூர்த்துத் தன்னினம் விரும்பத் தன்னினத்திலேசென்று பொருந்தினாற்போல, பொறுத்தற்கரிய வலியாற்பகையை மதியாது நீயுற்ற பெரியதளர்ச்சி நீங்கப்பிறிதொரு சூழ்ச்சியாற் போய்ப் பலரும் மகிழப்பரந்தஉரிமையையுடைய இடத்தின் நின் சுற்றத்தார் பலர்க்குநடுவே உயர்த்துச் சொல்லப்படுதலால், நீ செழியனாற்பிணிப்புண்பதற்கு முன்பு நின்னால் அழிக்கப்பட்டுப்பின்பு தம்மரசுவௌவாது நின்வரவு பார்த்திருந்தஅரசர் நமதாய் இவனாற்கொள்ளப்பட்டு உண்டு அடிப்பட்டுப்போந்தமேம்பட்ட நிலமும் இவன்பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும்கிடைத்தலுண்டாம், இவனது நெஞ்சு நமக்கு உரித்தாகப்பெறினெனநினைந்தும், நின்வரவு பார்த்திராது தம்மரசுவௌவியபகைவர் எடுத்தகொடியையுடைய உயர்ந்த மதிலையும்மிக்க காடும் அகழும் முதலாய காவலையுடைய அகலிய அரணினையும்நாம் இனி இழந்து தங்குவேம், இவன் நம்மை வெகுண்டுபார்த்தான் மிகவென நினைந்தும் பகைவேந்தர் ஏவல்செய்யத்தொடங்குதற்குக் காரணமாகிய நினது வலியுடனேபுகழை வாழ்த்திக் காண்பேனாக வந்தேன்; பெரும! திரண்டமுகிலெனக் கருதி மயங்கும் பல பரிசைப் படையினையும்,மலையென்று கருதித் தேனினந் தங்கும் பெரிய பல யானையினையும்,மாறுபடுவோர் அஞ்சும்படி பெருத்தலாற் (பி - ம்.அஞ்சும்படி பொருதலாற்) கடலெனக் கருதி மேகம் நீர்முகக்கமேற்கொள்ளும் படையினையும், அமையாது நஞ்சுகரக்கும்பல்லினையுடையவாகிய பாம்பினது தலைநடுங்கும்பரிசுஇடியென்று கருத முழங்கும் முரசினையும், எல்லார்க்கும்எப்பொருளும் வரையாது கொடுக்கும் வண்மையையும்உடைய குடநாட்டார் வேந்தே! - எ - று.

காவல! (8) பொருந! (13) பெரும! (33)கோவே! (40) ஏத்திக் காண்கு வந்தேனெனக் (32-3) கூட்டிவினைமுடிவு செய்க.

குன்று (3) என்றது சிறுமலைகள்; அன்றி,மணற்குன்றென்று நெய்தல்நிலமாக்கி ஏனை மூன்றொடுங்கூட்டி, நானிலத்தோருமென்று உரைப்பாருமுளர்.

அடுபொருந (13) என்றது, வேந்தற்குவெளிப்படையாய் நின்றது.

தளர்ச்சி (21) என்பதன்பின் நீங்கவெனஒருசொல் தந்தது.

‘அருமுன்பிற்....பிறிதுசென்று’(20-22) என்பதற்கு முன்போலவே தளர்ச்சி பிறிதாகப்பலருவப்பச் சென்றெனினும் அமையும்; அன்றி முன்பின்தளர்ச்சி பிறிதாகச் சென்றென்று உரைப்பாருமுளர்.

ஆனாது முழங்கும் முரசென்க.


(கு - ரை.) 1. செய்யுளில் இனமில்லாதஇடப்பெயர் அடையடுத்து வந்ததற்கு மேற்கோள்; நன்.மயிலை. சூ. 400.

1 - 2. புறநா. 6 : 1 - 4.

1 - 4. “தென்குமரி வடபெருங்கல்,குணகுடகட லாவெல்லைத், தொன்றுமொழிந்து தொழில்கேட்ப”(மதுரைக.் 70 - 72)

11. “நிலவெக்கர்” ('பொருந.213, கு - ரை.); குறுந். 320 : 3; கலித். 131 : 17.நிலவுமணல் வியன்கானலென்பது வஞ்சியடிக்கு மேற்கோள்;தொல். செய். சூ. 14, பேர், ந.

10 - 11. இயற்சீர் தூங்கிவந்ததென்பதற்குமேற்கோள்; தொல். செய். சூ. 216, பேர்., ந.

13. தொண்டி - (இங்கே) சேரநாட்டிற்கடற்கரைக்கண்ணதொரு பட்டினம்.

14 - 9. “அருங்கரை கவியக்குத்திக் குழிகொன்று, பெருங்கை யானை பிடிபுக்காங்கு” (பட்டினப். 223 - 4)

33. செய்கென்னும் வாய்பாட்டு வினைமுற்றுவினைகொண்டு முடிந்ததற்கு மேற்கோள்; தொல்.வினை. சூ. 7, ந.

34. புறநா. 16 : 2. குறிப்புரையைப்பார்க்க. ‘தோல்’ என்பது பரிசை என்னும் பொருளில்வந்ததற்கு மேற்கோள்; சிலப். 5 : 81, அடியார்.

36 - 7. “படுநீர்ப் புணரியிற்பரந்த பாடி” (முல்லை. 28)

38 - 9. பாம்பு இடிக்கு அஞ்சுதல் : புறநா.211 : 1 - 4; “விரிநிற நாகம் விடருள தேனு, முருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்” (நாலடி. 164)

40. “ஓம்பா வீகையின்” (பதிற்.42.)

(17)