380
தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வடகுன் றத்துச் சாந்த முரீஇ
........................ங்கடற் றானை
இன்னிசைய விறல்வென்றித்
5தென்னவர் வயமறவன்
மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய
வேறுபெ......................................த்துந்து
தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன்
10துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்
நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்
வல்வேற் கந்த னல்லிசை யல்ல
...................த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்ன னாகன் மாறே யிந்நிலம்
15இலம்படு காலை யாயினும்
புலம்பல்போ யின்று பூத்தவென் கடும்பே.

(பி - ம்.) 5 ‘வயன்மறவர்’ 7 ‘கூதுளங்’ 10 ‘யங்கையநன்மையன்’, ‘யங்கை யண்மையன்’, ‘யாங்கனீ நன்மையை’ 14 ‘அள்ளனாகன்’ 15 ‘இளம்படுகாளையாயினும்’

திணை - அது; துறை - இயன்மொழி.

நாஞ்சில்வள்ளுவனைக் கருவூர்க்கதப்பிள்ளை.


(கு - ரை.) 1. பவ்வம் - கடல் ; "தென்கடன் முத்தும்" (பட்டினப். 189 ; சிலப். 8 : 19) ; "வெண்டிரைத் தென்கடன் முத்தும்" (தஞ்சை. 93)

2. வடகுன்றம் - இமயம். சாந்தம் - சந்தனம். உரீஇ - உரிஞ்சி ; "வடவர் தந்த வான்கேழ்ச் சந்தம்" (அகநா. 340 : 16)

4. விறல் வென்றி - வென்றிவகை பலவற்றுட் போர்வீரத்தாலுண்டாகிய வெற்றி.

5. தென்னவர் வயமறவன் : "திருவீழ் மார்பிற் றென்னவன் மறவன்" (அகநா. 13 : 6)

6. முத்தாகுந்து - முத்தாகும் ; இஃது உம்மீற்றுப்பெயரெச்சம் ; உம், உந்தாயிற்று.

7. குளவி - மலைமல்லிகை. கூதளம் - கூதாளி ; இந்த இரண்டும் சேர்த்து வழங்கப்படும் ; "கூதளங் கவினிய குளவி முன்றில்" (புறநா. 168 : 12) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

9. தீஞ்சுளைப் பலவு : தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே", "தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்" (புறநா. 109 : 5, 129 : 4); "மன்றப் பலவின் றீஞ்சுனை" (ஐந். எழு. 4). நாஞ்சில் - ஒருமலை ; "நாஞ்சிற் பொருநன்" (புறநா. 137, 139, 140)

5 - 9. நாஞ்சில் வள்ளுவன் மறச்சாதியினனென்றும் பாண்டியர் களுக்குரிய படைவீரனென்றும் தெரிகிறது.
10. துப்பெதிர்ந்தோர்க்கு - வலியோடு எதிர்த்த பகைவர்க்கு ; "வெப்புடைய வரண்கடந்து, துப்புறுவர் புறம்பெற்றிசினே", "கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த, நெடுமொழி மன்னர்" (புறநா. 11 : 8 - 9, 54 : 8 - 9). உள்ளாச் சேய்மையன் - நினைத்தற்கும் எட்டாத மிக்க தூரத்துள்ளான்.

11. நட்பு எதிர்ந்தோர்க்கு - அன்பால் அடைந்தவர்க்கு.

10 - 11. "துப்புப் பகையுமாதல்", "துப்பெதிர்ந்தோர்க்கே........நண்மையன்’ என்பதனானும் அறிக"; (குறள், 1165, பரிமேல்.)

12. கந்தனென்பது, நாஞ்சின்மலைத்தலைவர் பரம்பரையில் உள்ளானும் இப்பாட்டுடைத் தலைவனுமாகிய ஒருவன் பெயர்.

14. ஆகன்மாறு - ஆதலால் ; "அனையை யாகன் மாறே" (புறநா. 4, 17, 20 : 20, பதிற.் 80 : 12).

15. வற்கடக் காலம் வரினும்.

16. போயின்று - நீங்கப்பெற்றது. பூத்த - பலவாற்றாலும் பொலிவு பெற்ற.

15 - 6. புறநா. 378 : 12, குறிப்புரை.

(380)