70
தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்கிவட் டணிகெனக் கூறி
5வினவ லானா முதுவா யிரவல
தைஇத் திங்கட் டண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ யல்லது சுடுதீ யறியா
திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்
10கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத் தறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும்
கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழு மோதி யொண்ணுதல்
15இன்னகை விறலியொடு மென்மெல வியலிச்
செல்வை யாயிற் செல்வை யாகுவை
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பா டன்றவ னீகை
நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே.

(பி - ம்.) 13 ‘பாணன்’

திணையும் துறையும் அவை.

அவனைக் கோவூர்கிழார் (பி - ம். கோவூரழகியார்)பாடியது.

(இ - ள்.) தேன்போல இனிய நரப்புத்தொடைபொருந்திய சிறிய யாழையுடைய பாண! ‘கயத்தின்கண்வாழும் யாமையை நாராசத்தின் கண்ணேகோத்தாற்போன்ற நண்ணிய கோலாற் பிணிக்கப்பட்டதெளிந்த கண்ணையுடைய பெரிய உடுக்கையோசை இனியகாண்க; இவ்விடத்தே சிறிது ஆறிப்போவீராக’ என்றுசொல்லிப் பலவும் என்னை வினவுதலமையாத முதியவாய்மையையுடைய இரவலனே! யான்சொல்லுவதனைக் கேட்பாயாக;தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போலக்கொள்ளக்கொள்ளத் தொலையாத சோற்றையுடைய அகன்றநகரிடத்து அடுநெருப்பல்லது சுடுநெருப்பறியாது 1சோற்றையும்தண்ணீரையும் விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்,கிள்ளிவளவனது நல்ல புகழை நினைத்து மணத்தை ஆராயும்ஆராய்ச்சியையுடைய வண்டுசிறியவெளிய ஆம்பலின்மீதேஊதும் கையான்வள்ளிய கொடையையுடைய பண்ணனதுசிறுகுடிக்கட் பாதிரிநாறும் மயிரினையும் ஒள்ளியநுதலினையும்இனிய முறுவலையுமுடைய விறலியுடனே மெல்ல மெல்ல நடந்துசெல்வையாயின் செல்வத்தையுடையையாவை; விறகைக்காட்டினின்றும் ஊரகத்துச் செலுத்துமாந்தர் அக்காட்டகத்துவிழுப்பொருள் எடுத்துக் கொண்டாற் போல்வதொரு நேர்பாடன்றுஅவனது வண்மை; அது பெறுவேங்கொ லென்று கருதவேண்டா;அவனது தாள் வாழ்க-எ - று.

பாண! தணிக எனக்கூறி வினவலானஇரவல! விறலியொடு மென்மெலச் செல்குவையாயினெனஇயையும்; வியனகர்ச் செல்வையாயினெனவும் அமையும்.நகரையுடையநாடென இயைப்பாரும் உளர்.

‘விறகொய்மாக்கள் பொன்பெற்றன்னதோர்தலைப்பாடன்று’ என்பதற்கு விறகிற்குச் சென்றோர்பொன்பெற்றாற் போல்வதொரு தலைப்பாடதென்று பொருளுரைப்பாரும்உளர்; அதுபொருந்துமேல் அறிந்து கொள்க.


(கு - ரை.) 1. தொடை-நரப்புத்தொடை;தந்தி, தேந்தீந்தொடை : பயனுவமம்; “தீந்தே,னணிபெற வொழுகி யன்ன வமிழ் துறுழ் நரம்பினல்யாழ்”(சீவக. 722)

2-3. புறநா. 249 : 3 - 4; “பகுவாயாமை, கம்பு ளியவ னாக விசிபிணித், தெண்கட் கிணையிற்பிறழும்” (அகநா. 356 : 2 - 4); “ஆமை யகடுபோலங்கட் டடாரி”, “யாமை, யள்ளகட் டன்ன வரிக்கிணை”(பு. வெ. 186, 206)

5. புறநா. 89 : 4.

6. “தைஇத் திங்கட் டண்கயம்படியும்” (நற். 80:7); “பனிச்சுனைத் தெண்ணீர்,தைஇத் திங்கட் டண்ணிய தரினும்” (குறுந்.196); “தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து” (ஐங்குறு.84)

7. “கொளக்கொளக் குறையாச்செல்வத்து” (பதிற். 82 : 12); “கொளக்கொளக்குறையாது தரத்தர மிகாது........நாடு” (மதுரைக்.426 - 8)

செயவெனெச்சம் இருதொழிலும் நிகழ்காலமும்ஏற்றுவந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 343;நன். - வி. சூ. 344.

6-7. “கொளக்குறை படாஅக் கோடுவளர்குட்டத்து” (அகநா. 162)

8. புறநா. 20 : 7 - 9.

9. புறநா. 58 : 10; ‘சோறு’ மருந்தெனப்படுதலை,மணி. 11 : 48, 117-ஆம் அடிகளாலும் அறிக; “சோழ வளநாடுசோறுடைத்து” (ஒளவையார் பாடல்)

12. ஊதும் - நுகரும்; கலித். 66; அகநா.132,

13. பண்ணன் சிறுகுடி : “தனக்கெனவாழாப் பிறர்க்குரி யாளன், பண்ணன் சிறுகுடி”,“பண்ணன் சிறுகுடி வடாஅது, தீநீர்க் கான் யாறு”,“கழற்காற் பண்ணன் காவிரி வடவயி, னிழற்கயம்”(அகநா. 54, 117, 177)

14. “கானப் பாதிரிக் கருந்தகட்டொள்வீ, வேனி லதிரலொடு விரைஇக் காண்வரச்,சில்லைங் கூந்தல்; (அகநா. 261 : 1 - 3)

15. “நன்மா மயிலின் மென்மெலவியலி” (மதுரைக். 608)

16. செல்வு-செல்வம்; “செல்வாயசெல்வந் தருவாய், நீயே”, “செல்வாய்த்திருவானாய் நீயே” (தே.)

17. ஒய்தல் - செலுத்துதல்; புறநா. 116: 8; நற். 74 : 4; பதிற். 73, 87.

19. தாள்வாழ்க வென்றல் மரபு; புறநா.101 : 10, 103 : 12, 171 : 15; “நாதன்றாள் வாழ்க” (திருவாசகம்)

(70)


1 “தண்ணீருஞ் சோறு மளிப்பான்றிருப்பனந் தாட்பட்டனே” (தனிப்பாடல்)