64
நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப
5பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.

(பி - ம்.) 4 ‘விசும்போடெருவை’

திணை - பாடாண்டிணை; துறை - விறலியாற்றுப்படை.
1 பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை 2நெடும்பல்லியத்தனார் பாடியது.

(இ - ள்.) நல்ல யாழையும் சிறுபறையையும்ஒருதலைமாக்கிணையுடனே கட்டிப் போவேமல்லேமோ? சொல்லுவாயாக,சிலவளையையுடைய விறலி! யானை யணிபொருத இடமகன்றபாசறைக்கண் ஆகாயத்தின்கண்ணே பறக்கும்எருவையைப் பசிய ஊன்றடி தகைப்ப மாற்றார் தேயத்தின்கண்ணேமருவிய அழகிய பெரிய செல்வத்தினையுடையமுதுகுடுமியாகிய கோமானைக் கண்டு மிக்க நீரான்அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு-எ - று.

எருவை - தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும்பருந்து; 3கழுகெனினும் அமையும்.

விறலி! குடுமிக்கோமாற்கண்டு புற்கையைநீத்தனம் வரற்குச் செல்லாமோவெனக் கூட்டிவினைமுடிவு செய்க.

தகைப்பருஞ் சிறப்பினென்பதூஉம்பாடம்.


(கு - ரை.) 1. புறநா. 152 : 14 - 8 :“குரல்புணர் நல்யாழ் முழவோடொன்றி, நுண்ணீராகுளி யிரட்ட” (மதுரைக். 605 - 6)

2. “செல்லா யோதில் சில்வளைவிறலி”, “செல்லா மோதில் சில்வளை விறலி”(பதிற். 40 : 21, 57 - 6)
சில்வளை விறலி : புறநா. 60 : 5, குறிப்புரை.

1-2. புறநா. 103 : 1; மலைபடு. 1 -13; பதிற். 41 : 1 - 5.

3. நிரைபுநிரை ஆசிரியத்துள் வந்ததற்குமேற்கோள்; தொல். செய். சூ. 14, ந.

4. “கரும்பின் பாத்திப் பூத்தநெய்தல், இருங்க ணெருமையினிரைதடுக் குநவும்” (பதிற்.13 : 3 - 4) என்பதும், ‘நெய்தலானது அக்கரும்பு முதலாயமற்றோரிரையின் பாங்கரிற் செல்லாது தன்னையேநின்று தின்னும்படி தான் போதவுண்ட எருமை நிரையைத்தடுக்குமிடங்களும்’ என்னும் அதன் உரையும், “செலல்விலங்குதேன்” (தக்க. 360) என்பதும் இவ்வடியின்பொருளோடு ஒப்பு நோக்கற்குரியன.

7. புற்கை - புல்லரிசிக்கூழ்; அதுநீர்வடிவமாகவே யிருப்பதாதலின், ‘நெடுநீர்ப்புற்கை’என்றார். புறநா. 84 : 1; “தெண்ணீ ரடுபுற்கை”(குறள், 1065)

மு. பரிசில்பெறப்போகல்வேண்டுமென்னும்குறிப்பிற்கு மேற்கோள்; தொல். புறத்திணை.சூ. 30, இளம். 36, ந. விறலி, செல்லாமோ வென்றமையின், இது விறலியாற்றுப்படையாயிற்று.

(64)


1. பாட்டுடைத்தலைவன் பெயரின் ஒருபகுதி 6-ஆம் அடியில் வந்துள்ளது.

2 இவரது பெயர்க்காரணத்தை முதலடிஅறிவிக்கின்றது.

3 தக்க. 562, உரை.