106
நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
5கடவன் பாரி கைவண் மையே.

(பி - ம்.) 3 ‘வேண்டேமென்னா’

திணை - அது. துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூவாதலால் அவை இரண்டினும்வைத்து எண்ணப்படாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம்பூவாயினும் ஒருவனுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்னா; அதுபோல, யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும் பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடையன்-எ - று.

'குவியிணர்ப் புல்லிலை யெருக்கம்' என்றது முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர்,

உம்மை : இழிவுசிறப்பு.

மெல்லியரென்பதற்கு வறுமையுற்றாரென்றும் உரைப்பர்.


(கு - ரை.) 2. "புல்லெருக்கங் கண்ணி" (தொல். கிளவி. சூ. 56, சே. "ஒல்லேம்"); "துன்னியவூ ரினும்விரைசார்ந் தறியாத புல்லெருக்குஞ் சூடிக் கொண்டாய்" (வாட்போக்கிக்கலம்பகம், 99)

(106)