163
நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
5இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே.

(பி - ம்.) 2 ‘மன்மாண்’

திணை - அது; துறை - பரிசில்.

பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில்கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.

(இ - ள்.) நின்னைக் காதலித்து உறையும் நின்சார்வாய மகளிர்க்கும் நீ அன்பு செய்தொழுகப்பட்ட மகளிர்க்கும் பலகுணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும் நமது சுற்றத்தினது மிக்கபசி நீங்க நினக்கு நெடுநாட்படக் குறித்த எதிர்ப்பைத் தந்தோர்க்கும் மற்றும் இன்னதன்மையாரென்று கருதாது என்னொடுகூடி உசாவுவதும் செய்யாது சதுரப்படக் குடிவாழ்க்கை வாழக்கடவேமென்று கருதாது நீயும் யாவர்க்கும் வழங்குவாயாக, எனது மனைக்குரியோயே! பலாப்பழ முதலாயின தூங்கும் முதிரமென்னும் மலைக்குத் தலைவனாகிய திருந்திய வேலையுடைய குமணன் நல்கிய செல்வத்தை-எ - று.

மனைகிழவோய்! குமணன் நல்கிய செல்வத்தை நீயும் எல்லோர்க்கும் கொடுமதியெனக் கூட்டுக.

நின் பன்மாண்கற்பிற் கிளைமுதலோர்க்குமென இயையும்; நின் றாங்குரைப்பினும் அமையும்.

நீயுமென்ற உம்மை யானுங்கொடுப்பேன் நீயுங்கொடுவென எச்சவும்மையாய் நின்றது.


(கு - ரை.) 3. கடும்பு - சுற்றம்; புறநா. 22 : 27. கடும்பசி - மிக்க பசி; புறநா. 230 : 9.

4. “குறியெதிர்ப்பையாவது அளவுகுறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது” (குறள்.221,பரிமேல்.); “கூற்றுங், குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே....களிறு” (முத்தொள்ளாயிரம்)

6. வல்லாங்கு : புறநா.47 - 3.

மு. அரசன் விடைகொடுப்பப் போந்தவன் கூற்றிற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 30, இளம்.;

‘நின்னயந்துறைநர்க்கு.....வளனே : இது மனைக்கு மகிழ்ந்து கூறியது’ (தொல்.புறத்திணை. சூ. 36, .)

(163)