389
நீர்நுங்கின் தண்வலிப்பக்
கானவேம்பின் காய்திரங்கக்
கயங்களியுங் கோடையாயினும்
ஏலா வெண்பொன் போருறு காலை
5எம்மு முள்ளுமோ பிள்ளையம் பொருநன்
என்றீத் தனனே யிசைசா னெடுந்தகை
இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன்
செலினே காணா வழியனு மல்லன்
புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து
10குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி யருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி யெழாஅ நல்லேர் முதியன்
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீட
15வீறுசா னன்கல நல்குமதி பெரும
ஐதக லல்குன் மகளிர்
நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே.

(பி - ம்.) 1 ‘கவைநிறபக’ 4 ‘போகுறு.......பொருநவென்று’ 5 ‘பொருநவென்று’ 13 ‘ஆறுநுஙகன்’, ‘ஆகுநுங்கன’ 14 ‘பசிதது வொஙககறபழங’ 15 ‘பெருமவைததல’

திணையும் துறையும் அவை.

ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார்.


(கு - ரை.) 1. நீர்நுங்கு - நீரையுடைய பனநுங்கு. வலிப்ப - நீரின்றி வற்ற.

2. திரங்க - உலர ; “திரங்குமர னாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 431)

3. கயம் - ஆழமான நீர்நிலை. களியும் - நீர்வற்றிக்களிமயமாதற்குரிய.

4. வெண்பொன் - வெள்ளிக்கோள். போர் - மற்றைக் கோள்களோடு அது செய்யும் யுத்தம். இது கிரகயுத்தமென்று சொல்லப்படும் ; “ஆதி சான்ற மேதகு வேட்கையின், நாளுங் கோளு மயங்கிய ஞாட்பின், மதியமு ஞாயிறும் பொருவன போல” (பாரதம்; தொல். புறத். சூ. 17, மேற்.) ; “தோளோடு தோடேய்த் தலிற்றொன்னிலந் தாங்கலாற்றாத், தாளோடு தாடேய்த்தலிற் றந்த தழற்பி றங்கல், வாளோடு மின்னோடுவபோனெடு வானினோடும், கோளோடு கோளுற் றனவொத் தடர்ந் தார்கொதித்தார்” (கம்ப. வாலிவதை. 38) என்பது இங்கே அறியற்பாலது.

5. எம்மும் உள்ளுமோ - எம்மையும் நினைப்பானோ.

7. காட்சிக்கு எளியனுமல்லன்.

8. காணுதற்கு அரியனுமல்லன்.

9. புன்றலை - சிவந்த தலை ; “புன்றலை மகாரோடு” (மலைபடு. 253, ந.) இனைய - வருந்த.

9 - 11. “கறையடி மடப்பிடி கானத் தலறக், களிற்றுக்கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து, கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து, பெரும்பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர், நறவுகொடை நல்லிற் புதவுமுதற் பிணிக்கும், கல்லா விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்” (அகநா. 83 : 3 - 10)

12. பகைவர் புறங்கொடுத்துச் செல்லும்போது பின் செல்லாத ; மதுரைக். 177, ந. ; பதிற். 90 : 27, உரை.

13. ஆதனுங்கன் : இப்பாட்டுடைத் தலைவன்.

14. ஒக்கல் - சுற்றம். பழங்கண் - துன்பம்.

17. நெய்தல் - நெய்தற்பறை ; சாப்பறை.

(389)