51
நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
5தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
10செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே.

(பி - ம்.) 5 ‘தண்டமிழ்ப்’ 9 ‘நுண்பல்’ 11 ‘கலம்வருவோரே’

திணை - வாகை; துறை - அரசவாகை.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் (பி - ம். ஐயூர் கிழார்) பாடியது.

(இ - ள்.) நீர் மிகுமாயின், அதனைத்தாங்கும் அரணுமில்லை; நெருப்பு மிகுமாயின், உலகத்து நிலைபெற்ற உயிர்களை நிழல்செய்யும் நிழலுமில்லை; காற்று மிகுமாயின், அதனைப்பொறுக்கும் வலியுமில்லை; விளக்கம் மிக்கு அவற்றையொத்த சினம்பொருந்திய போரையுடைய வழுதி குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொதுவென்று கூறப்பொறானாய்ப் போரையேற்றுத் திறையை வேண்டுவனாயின், கொள்க வென்றுசொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கந் தீர்ந்தார்; கொடாமையின், யாவராலும் மிக இரங்கத்தக்கார், அவனது அருளையிழந்த அரசர், நுண்ணிய பல கறையான் அரிதாக உழந்தெடுக்கப்பட்ட செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல ஒருபகற்பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர்-எ - று.

வழுதி, தமிழ்பொதுவெனப் பொறானாய்க் கொண்டிவேண்டுவனாயின், கொடுத்தமன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர், ஒருபகல் வாழ்க்கைக்கு அலமருவோர்; ஆதலான், அவர் அளியரோ அளியரெனக் கூட்டி வினைமுடிவு செய்க; அவன் அளியிழந்தோராகிய அலமருவோர் அளியரெனக் கூட்டியுரைப்பினும் அமையும்.

அளியரோ அளியரென இரங்கற்குறிப்புத் தோன்ற அடுக்கிநின்றது.


(கு - ரை.) 1. “ஒலித்துடன், நீர்மிகி னில்லை சிறை” (பழ. 190); “சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ” (மணி. 5 : 19); “சிறை யென்பதில்லை செவ்வே செம்புனல் பெருகு மாயின்” (சூளா. கல்யாண. 155)

3. ஒளியாவது : அரசர்பாலுள்ள தெய்வத்தன்மை; அதனை, “இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்” (குறள், 698); “உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” (சீவக. 248) என்பவற்றால் அறிக.

4. அவற்றோ ரன்னவென்பதில் ஓர் : இடைச்சொல். அவற்றையன்ன -நீர், தீ, வளியென்னும் இம்மூன்றையும் ஒத்த; ஐம்பூதங்களுள் இம் மூன்றுமே புடைபெயர்ந்து வருத்துவனவாதலின், இவற்றைக் கூறினார். வழுதி -பாண்டியன்; சினத்தையுடைய வழுதி யெனக் கூட்டுக.

5. புறநா. 8 : 2, குறிப்புரை. ‘ஞாலம் பொதுவெனப் பொறாவரசர்’ (குறள், 49, பரிமேல்.); “வையம்பொதுக் கடிந்து”, “பூவலயம் பொது நீக்கி யாண்டருளி” (பெரிய. மனுநீதி. 32, கோச்செங்கட். 17); ‘தனி கோலுகையாவது பூசக்கரம் பொதுக்கடிதல்’ (தக்க. 2, உரை)

6. கொண்டி - கொள்ளப்படுவது; ஆவது திறை; “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து” (மதுரைக். 137)

8. “அளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே” (குறுந். 56 : 5)

10. செம்புற்றீயல் : புறநா. 119 : 3.

9 - 10. “சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த, நெடுஞ்செம் புற்றத்து” (அகநா. 149)

11. உலமரல் : புறநா. 207, உரை.

9 - 11. “மண்ணுள்வாழ் சிதலைச் சாதி மற்றவை வாழுநாள்கள், எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய் தெழும்” (சூளா. அரசியல். 316)

10 - 11. திருவா. நீத்தல். 41. (51)