212
நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
5வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
10வாயார் பெருநகை வைகலு நக்கே.

(பி - ம்.) 10 ‘வைகலு மகிழ்ந்தே’

திணை - அது; துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

(இ - ள்.) உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு ஆரன்மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தேயடக்கி மதுவுண்ட மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய புது வருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும் பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய் உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான், கோப்பெருஞ்சோழன்; புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி மெய்ம்மையார்ந்த மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று.

நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை.

கோழி - உறையூர்.

நுங்கோ யாரென வினவின், எங்கோக் கோப்பெருஞ்சோழன், அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

ஆகிக் கெழீஇ நக்கென்னுஞ் செய்தெனெச்சங்களைக் கோழியோ னென்னும் வினைக்குறிப்போடு முடிக்க.


(கு - ரை.) 1. மு. பதிற். 20 : 1.

2. களமர் - களத்தேசென்று தொழில் செய்வோர்.

4. சூடு - சுடப்பட்டது.

3-4. புறநா. 42 : 14 - 7.

(212)