234
நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயிற்
பலரோ டுண்டன் மரீஇ யோனே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நோவக்கடவேனோ யான்? எனது வாழக்கடவ மிக்க நாள் மாய்வதாக; பிடியினது அடிபோன்ற சிறிய இடத்தினை மெழுகித் தன்னை மேவப்பட்ட காதலி புன்மேல் வைக்கப்பட்ட இனிய சிறிய பிண்டத்தை எவ்வாறு உண்டான்கொல்லோ? 1உலகத்தார் யாவரும் புகும்பரிசு திறந்த வாயிலையுடைய பலரோடுங் கூடி உண்டலை மருவியோன்-எ - று.

இன்சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு.

பலரோடுண்டலை மரீஇயோன் பிண்டம் யாங்கு உண்டனன் கொலெனக் கூட்டுக.


(கு - ரை.) 1. ‘செய்கென்பது, நோகோ யானே யெனப் பெயரொடு முடிந்ததாலெனின் அவ்வாறு வருவனவுளவேனும் சிறுபான்மை; வினை கோடலே பெரும்பான்மையென வுணர்க’ (தொல். வினை. சூ. 7, கல்.; .) செய்கென்பது, நோகோ யானே யெனச்சிறுபான்மை பெயர்கோடல் உரையிற்கொள்க’ (இ. வி.சூ. 237, உரை)

(234)


1.”உலக விடைகழி” (சிலப். 10 : 27)