188
படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
5நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே.

திணையும் துறையும் அவை.

பாண்டியன் அறிவுடைநம்பி பாட்டு.

(இ - ள்.) படைக்கப்படும் செல்வம்பலவற்றையும் படைத்துப் பலருடனே கூடவுண்ணும் உடைமைமிக்க செல்வத்தையுடையோராயினும் காலம் இடையேயுண்டாகக் குறுகக் குறுக நடந்துசென்று சிறிய கையைநீட்டிக் கலத்தின்கட் கிடந்ததனைக் தரையிலேயிட்டும்கூடப்பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியுங் கையால்துழாவியும் நெய்யையுடைய சோற்றை உடம்பின்கட்படச்சிதறியும் இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும்புதல்வரை இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும்பொருளில்லை, தாம் உயிர்வாழும் நாளின்கண்-எ - று.

தொட்டென்பதற்குக் கூடவாரிப்பிடித்தெனினும்அமையும்.

குறையென்பது, முடிக்கப்படுங்கால்முடிக்கப்படும் பொருள்.

இனிப்பயக்குறையுள்ளதென ஒருசொல்வருவித்துத் தாம் வாழும் நாளும் இல்லையென்று கூறுவாரும்உளர்.


(கு - ரை.) 1. படைப்பு : புறநா.22 : 30

1 - 2. “துகடீர் பெருஞ்செல்வந்தோன்றியக்காற் றொட்டுப், பகடு நடந்தகூழ் பல்லாரோடுண்க” (நாலடி. 2); “இல்வாழ்க்கையைப் பலபடைப்பாகிய செல்வத்தோடே நடத்தி’, ‘பலபடைப்பாகியசெல்வத்தோடே மிக்க கைப்பொருளையும் கொடுத்து’(சிலப். 2 : 84 - 90, 15 : 54 - 75, அடியார்.)

3. “தளர்நடைப் புதல்வனை” (ஐங்.66); “தளர்பு தளர்போடும் பூங்கட் புதல்வன்”,“குறுமோட்டு மூதாய் குறுகுறோடி” (அகநா. 66,374); “குறுகுறு நடந்து செல்லும்” (ஆனைக்கா.அகிலாண்ட. 8)

“மொகு மொகு வென்பது இரட்டைக்கிளவி......குறுகுறுநடந்து சிறுகை நீட்டி‘ (தக்க. 90, உரை, மேற்.);இரட்டைக்கிளவிக்கு மேற்கோள்; நன். சூ. 395, மயிலை;நன். வி. சூ. 396.

4 - 5. குறள், 64, பரிமேல். மேற்.

3 - 6. “முறியிள முல்லை மெல்லரும்பன்ன மூரல்வெண் டயிரளை பொதிந்து, குறுகுறு நடந்துசிறுவர்வந் தீண்ட” (பாகவத. 6 : விருந்தாவன.9)

7. குறை - இன்றியமையாப் பொருள்;அது, ‘பயக்குறையில்லைத் தாம் வாழு நாளே என்பதனானுமறிக’(குறள், 612, பரிமேல்.); ‘பொருளைச் சொல் இன்றியமையாமையின்,அதனைக் குறையென்றார்,.....பயக்குறை...நாளே என்றாற்போல’(தொல். உரி. சூ. 100, சே.)

மு. பொருளொடுபுணர்ந்தபக்கமென்பதில்,‘புணர்ந்தபக்கமென்றதனாற் புதல்வர்ப்பெறுதலுங்கொள்க’என்று கூறி இதனை மேற்கோள் காட்டினர் (தொல்.புறத்திணை. சூ. 17, இளம்.; 21, ந.)

(188)