(கு - ரை.) 1. பழங்கண் - துன்பம். 2. துணை - மனைவி. 4. குழிசி - சமைத்தற்குரிய கலம். மலர்க்கும் - நிமிரச்செய்யும். 6. எம்வரைவோர் - எம்மை ஏற்றுக்கொள்வோர். 4 - 6. குழிசி மலர்க்குங் கடனறியாளர் - அரிசி முதலியன இல்லா மையாற் கவிழ்த்துவைக்கப்பட்டுள்ள கலத்தைச் சமைத்தற்பொருட்டு அடுப்பில் நிமிர்த்துவைக்கச் செய்யும் வண்மையையுடையார் ; "கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச், சுரன்முத லிருந்த சில்வளை விறலி", "ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை, மலர்ப்போர் யார்" (புறநா. 103 : 3 - 4, 179 : 1 - 3) என்பவை இங்கே அறியற்பாலன. 7. உலைநசை - உலைதற்குக் காரணமான இச்சை. 9. அண்ணல் : விளி. 10. ஈர்ங்கை - உண்டு பூசிய கை ; "ஈர்ங்கை விதிரார் கயவர்" (குறள், 1077) 11. கூர்ந்த எவ்வம் - மிக்க துன்பம். 12. பருத்திவீடு - பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு. 13. மூடைப்பண்டம் - பொதியாகிய பொருள்கள் ; "பொதிமூடைப் போரேறி" (பட்டினப். 137) ; மூடை மூட்டையென வழங்கும். 14. நிணமூரி - நிணத்தின் துண்டம். 12 - 4. நிணத்திற்குப் பருத்திப்பஞ்சு உவமை ; "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன, நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை" (புறநா. 125 : 1 - 2) 16. தொன்றுபடுசிதார் : புறநா. 400 : 10. துவர - முற்ற ; "துவர முடித்த துகளறு முச்சி" (முருகு. 26) 17 - 8. கலிங்கத்திற்குப் பகன்றைமலர் உவமை; "திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ" (புறநா. 390 : 15) ; "நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத், தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட, நீரிற்பிரியாப் பரூஉத்திரி கடுக்கும், பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ" (குறுந். 330 : 1 - 4) ; "பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி" (பதிற். 76 : 12 - 3) 20. கிணைப்பறைக்கு முழுமதி உவமை ; "மதியத் தன்னவென் விசியுறு தடாரி", "மாகவிசும்பின் வெண்டிங்கள், மூவைந்தான் முறைமுற்றக், கடனடுவட் கண்டன்னவெ னியம்" (புறநா. 371 : 17, 400 : 1 - 4) 23. "காவிரி புரக்கு நாடுகிழ வோனே" (பொருந. 248) ; " காவிரி புரக்கு நாடு கிழவோற்கு" (சிலப். 27 : 171) (393)
|