(பி - ம்.) 12 ‘பொறியுணர்’ திணை - பாடாண்டிணை; துறை - பரிசில்கடாநிலை. சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது. (இ - ள்.) பயன்பொருந்திய பெரிய முகில் பெய்யாது ஒழிதலால் நீர்நிலைகள் களியாய் முளியும் கோடைக்காலமாயினும் துளைபொருந்திய தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நிழற்கண் கதிர்போலுங் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணங்கூடும் நீர்விளங்கும் வயலையுடைத்தாகிய நாட்டையுடைய பெரிய வென்றியையுடையோய்! ஆகாயத்தைப் பொருந்தும் நெடிய குடையினையும் வலிய குதிரையினையுமுடைய சென்னி! அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண் சென்று பொருந்தினான் ஒருவன் யானுற்ற துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாகவேண்டுமென்னும் ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல விரையத் தீர்ப்பாயாக, என்னைக் கருதிவரப்பட்ட விருந்தினரைக் கண்டுவைத்தும் அவர்க்கு விருந்தாற்றமாட்டாமல் ஒளிக்கும் நன்மையில்லாத இல்வாழ்க்கையையுடைய ஐம்பொறியும் குறைவின்றிப்பொருந்திய எனது யாக்கையின்கட்டோன்றி அவற்றானாய பயன்கொள்ளாதபடி எனது அறிவுகெட நிலைபெற்ற வறுமையை-எ - று. மதியும் அத்தையும் அசைநிலை. பெருவிறல்! சென்னி! சான்றோரிருந்த அவையத்துற்றோன் பூசலை அவர் விரையக் களைந்தாற்போல எனது நல்கூர்மையை வல்லே களை யெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. நந்து வளையொடு பகன்மணம் புகூஉமென்ற கருத்து: அவை தம் செருக்கினால் சாதியறியாது மயங்கிப் புணருமென்று நாட்டின்மிகுதி கூறியதனால் அவன் செல்வமிகுதி கூறியவாறு. 1‘நாகிளந் தவளையொடு பகன்மணம் புகூஉம்’ என்று பாட மோதி, நந்தினேற்றை நாகிளந்தவளையுடனே தத்தம் இனத்தோடு மணம்புகூஉமென்று உரைப்பினும் அமையும். ‘ஆசாகு’ என்பதனை இரங்கற்குறிப்புப்படுமொழி யென்பாரும் உளர். பெருவிறலையுடைய வயமான்சென்னியெனினுமாம். 2‘பொறிப்புண ருடம்பிற் றோன்றி’ என்பதற்குப் பாவைபோலும் வடிவுமாத்திரையே தோன்றித் தோன்றிய பயன்கொள்ளாமையால் என் அறிவுகெட நின்ற நல்கூர்மையென்றும், ‘விருந்துகண்டொளிக்கும்’ என்பதற்கும் வறுமைகண்டு, வந்தவிருந்து தாம் அது காணமாட்டாது ஒளிக்குமென்றும் உரைப்பாரும் உளர். மாறியென்பது மாறவெனத் திரிக்கப்பட்டது. |