264
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ
டணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்
தினிநட் டனரே கல்லுங் கன்றொடு
5கறவை தந்து பகைவ ரோட்டிய
நெடுந்தகை கழிந்தமை யறியா
தின்றும் வருங்கொல் பாணரது கடும்பே.

(பி - ம்.) 1 ‘சேர்த்து’ 6 - 7 ‘யறியா, நின்று மிவருங்கொல்’

திணையும் துறையும் அவை.

... ... ... உறையூர் இளம்பொன்வாணிகனார் (பி - ம். .............ன்சாத்தன் கொற்றனார்) பாடியது.

(இ - ள்.) பருக்கைகளையுடைய இடத்துத்திட்டையை (பி - ம். பதுக்கைக் கல்லை)ச் சேர்த்தி ஆண்டுள்ள மரலைக்கீறித் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே அழகிய மயிலினது பீலியைச் சூட்டிப் பெயரை யெழுதி இப்பொழுது நட்டார், கல்லையும்; கன்றுடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரை ஓட்டிநோக்கிய நெடுந்தகை பட்டமை யறியாது இன்றும் வருங்கொல்லோ பாணரது சுற்றம்?-எ - று.

பட்டமையறிந்து வாராதொழியுமோ அறியாது வருமோ வென ஐயமாக்குக.

பதுக்கை சேர்த்ததேயன்றிக் கல்லும் நட்டனரென உம்மை எஞ்சி நின்றது.


(கு - ரை.) 2. ‘தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, திரங்குமரனாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 430 - 31)

3 - 4. புறநா. 260: 26 - 8; ‘’நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”; ‘’பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” (அகநா. 67: 8 - 10, 131: 10 - 11)

மு. ‘’இனிப், பரலுடை மருங்கிற் பதுக்கையென்னும் புறப்பாட்டினுள், அணிமயில்.....கல்லும் எனக் கன்னாட்டுதல் பெரும் படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின் நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டுநாட்டோர் முறைமையென்பது, சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க” (தொல். புறத்திணை. சூ. 5, ந.)

(264)