359
பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்
களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
நினக்கும் வருதல் வைக லற்றே
10வசையு நிற்கு மிசையு நிற்கும்
அதனால், வசைநீக்கி யிசைவேண்டியும்
நசைவேண்டாது நன்றுமொழிந்தும்
நிலவுக்கோட்டுப் பலகளிற்றொடு
பொலம்படைய மாமயங்கிட
15இழைகிளர் நெடுந்தே ரிரவலர்க் கருகாது
கொள்ளென விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்குநீ யெய்திய புகழே.

(பி - ம்.) 4 ‘பேஎமகளிர்’ 5 ‘மெயயகளரி’ 13 ‘நிலவுததோடடு’ 14 ‘மாமயங்கி’ 16 ‘விடுகையாயின’

திணை - அது; துறை - பெருங்காஞ்சி.

அந்துவன்கீரனைக் காவட்டனார் (பி - ம். அந்துபனகீரனைததகா நட்டனார்)


(கு - ரை.) 1. பாறுபட - கெட. பறைந்த - தேய்ந்த.

2. கூகை - கோட்டான்.

3. பல்ல - பல்லையுடையனவாய். 4. தழூஉப்பற்றி - தழுவி.

5. விளர் - வெண்மை; "விளரூன் றின்ற வீங்குசிலை மறவர்", "விளரூன் றின்ற வேட்கை" (அகநா.89 : 10, 265 : 15); நற். 41 : 8.

8. காடு - மயானம்.

9. வைகல் - கழிதல். நினக்கும் வைகல் வருதல் அற்று.

10. வசை - பழி. இசை - புகழ்.

10 - 12. "கெடுவ லெனப்பட்டக் கண்ணுந் தனக்கோர், வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை, முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய, கற்றேயுந் தேயாது சொல்" (பழ.394). 14. கொலம்படை-பொற்கலனை.

15. இழைகிளர் நெடுந்தேர் : புறநா.123 : 4, குறிப்புரை.அருகாது- குறையாமல். கலித்.99 : 7.

16. விடுவையாயின் - கொடுப்பாயாயின்; ‘இடுவை’ என்று பிரிப்பினும் பொருந்தும். வெள்ளென - யாவர்க்கும் தெரிய; புறநா. 207 : 9.

18. புகழ் நீடுவிளங்கும்.

(359)