263
1பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
5பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே.

திணை - கரந்தை; துறை - கையறுநிலை.

................... ...................... ..............

(இ - ள்.) பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினை யுடைத்தாகிய பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின் தொழாயாய்ப் போதலைப் பரிகரிப்பாயாக; தவறாதே.........யிடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும், இக்கொடிய வழி; பல ஆக்களாகிய திரண்ட நிரை மீண்டு தன்னோடு போதரப் போந்து இயல்பாகிய போர்த் தொழிலையுடைய வீரர் இரிந்தோடத் தான்போகானாய் வில் உமிழப்பட்ட விரைந்த அம்பு குளிப்பக் கரையைக் கொல்லும் புனலின் கண் அணைபோல எதிர்நின்று விலக்கியவனது கல்லை-எ - று.

புனற்சிறையின் விலங்கியோன்கல்லைத் தொழாதனை கழிதலை ஓம்பு; தொழவே அவ்வறநிலையாறு வண்டுமேம்படுமெனக் கூட்டுக.

தொழுது போகவே கொடுங்கானம் மழைபெய்தலாற் குளிருமென்பான், காரியமாகிய வண்டு மேம்படுதலைக் கூறினான்.

வண்டென்பது, மறவருள் ஒரு சாதியென்பாரும் உளர்.

ஆறு வண்டு மேம்படூஉமென இடத்துநிகழ்பொருளின்தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.


(கு - ரை.) 1 - 2. புறநா. 368: 14 - 5, 392: 4 - 5.

8. புறநா. 169: 4 - 5, குறிப்புரை.

மு. கண்டோர் கையற்றுக் கூறியதற்கும், நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தியதற்கும் மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 5, ந.

(263)


1. இதுமுதலிய மூன்றுபாட்டுக்களின் உரையும், 266-ஆம் பாட்டும் அதனுரையும் மிதிலைப்பட்டி அழகியசிற்றம்பலக்கவிராயரவர்கள் வீட்டுப் பிரதியில்மட்டும் இருந்தன.