209
பொய்கை நாரை போர்விற் சேக்கும்
நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல்
அகலடை யரியன் மாந்தித் தெண்கடற்
5படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து
பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்
10பெறாது பெயரும் புள்ளினம் போலநின்
நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந
ஈயா யாயினு மிரங்குவே னல்லேன்
நோயிலை யாகுமதி பெரும நம்முட்
15குறுநணி காண்குவ தாக நாளும்
நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை யன்ன மார்பிற்
செருவெஞ் சேஎய்நின் மகிழிருக் கையே.

திணை - அது; துறை - பரிசில்கடாநிலை.

1மூவன் பரிசல் நீட்டித்தானைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது,

(இ - ள்.) பொய்கைக்கண் மேய்ந்த நாரை போரின்கண்ணே உறங்கும் நெய்தலையுடைய அழகியவயற்கண் நெல்லையறுக்கும் உழவர் முகையவிழ் கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டு தெளிந்த கடலினது ஒலிக்குந்திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும் மென்புலத்தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே! பல பழத்தையும் நச்சித் தாம் வாழ்தற்கிடமாகிய ஆகாயத்தின் கண்ணே உயரப்பறந்து பெரிய மலையின்முழை எதிரொலி முழங்கச் சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரியமரம் பழுத்துமாறிற்றாக வருந்திப் பழம் பெறாதே மீளும் புள்ளினத்தையொப்ப நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து நின்புகழைக் கூறும் பரிசிலேன் யான் வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்? நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன்; அது நிற்க, நோயின்றியிருப்பாயாக; பெரும! நம்மிடத்து உளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக, நாடோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன்போலுஞ் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலைபோலும் மார்பினையுடைய போரைவிரும்பும் சேயையொப்பாய்! நினது மகிழ்ச்சியையுடைய நாளோலக்கம்-எ - று.

பாணிபார்க்கும் மார்பு - பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு.

நம்முட் குறுநணி காண்குவதாகவென்றது, நீ என்மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றிப் பிறரறியாதொழிவாராகவென்னும் நினைவிற்று.

பொருந! வாண்மேம்படுந! சேஎய்! நின் இசைநுவல்பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ? நீ ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்; பெரும! நோயிலையாகுமதி; நம்முட் குறுநணியை நின் இருக்கை காண்குவதாக; பிறர் காணாதொழிகவெனக் கூட்டுக.

நோயிலையாகென்பது, நீ செய்த தீங்கால் நோயுறுவை, அஃதுறா தொழிக வென்பதாம்; இனி, நின்மகிழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணுங் காட்சி உளதாகவென்றுமாம்.

இதனாற் காட்சியுண்டாகாதென்பது குறிப்பு.

இனி, குறுநணி காண்குவதாக’ என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற்காணுங் காட்சி உளதாகவென்பது கூடாது, நீ செய்த கொடுமையானென்றுரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. போர்வு - நெற்கதிர்ப்போர்; “கயலார் நாரை போர்விற் சேக்கும்” (ஐங்குறு. 9)

2. தொழுவர் - தொழில் செய்யும் உழவர். புறநா. 24 : 1; “நெல்லரி தொழுவர்” (நற். 195)

3. மு. புறநா. 383 : 7; “ஆம்ப லாயிதழ் கூம்புவிட்” (குறிஞ்சிப். 223)

6. மு. புறநா. 42 : 18. 8. புறநா. 91 : 8.

7. அல்குதல் - தங்குதல்.

9. கை, செய்வதென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; குறள், 925, பரிமேல்.

12, வினையெச்சத் தன்மைவினைக்குறிப்பு முற்றுக்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. .)

14. புறநா. 205 : 9.

19. இருக்கை - நாளோலக்கம். காலைப்பொழுதில் தன்னையாவரும் எளிதிற் காணும்படி அரசன் வீற்றிருக்குமிடம்.

(209)


1. மூவனென்னும்பெயர் நற்றிணை, 18-ஆம் செய்யுளிலும் வந்துள்ளது.