104
போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை
ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும்
தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை
5 நுண்பல் கரும நினையா
திளையனென் றிகழிற் பெறலரி தாடே.

(பி - ம்.) 4 ‘வெந்தை’

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நீங்கள் பாதுகாமின், மறவீர்! நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊரின்கண் இளம்புதல்வர் ஆடக் கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே 1யானையைக் கொன்றுவீழ்க்கும் இழுத்தலையுடைய முதலையை யொக்கும் என் இறைவனது நுண்ணிய பல கருமத்தையும் நினையாதே அவனை இளையனென்று மதியாதிருப்பின் நுங்களுக்கு வென்றிபெறுதல் அரிது-எ - று.

மறவீர்! நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையனென்று இகழின் வென்றிபெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமினெனக் கூட்டுக.

மீப்புடையென்றோதி, மிகுதியையுடையவென்று உரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. மறவீர் - வீரர்களே. நும்மை : உருபுமயக்கம்.

2. ஊர்க்குறுமாக்கள் : புறநா. 94 : 1, குறிப்புரை; கலித். 82 : 9.

4. கராம் - முதலை விசேடம்; இதனை, "கொடுந்தாண் முதலையு மிடங்கருங் காரமும்" (257) என்னும் குறிஞ்சிப்பாட்டாலும் அதன் உரையாலும் உணர்க. என்னை : புறநா. 78 : 2, குறிப்புரை.

3 - 4. "உரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி" (மலைபடு. 211)

1 - 4. "என்னை முன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன் னின்று கன்னின் றவர்" (குறள், 771). 6. ஆடு - வென்றி.

மறவர்களை நோக்கிக் கூறியதுபோலத் தலைவனது வென்றி கூறிய வாறு.

(104)


1.குறள், 495.