(பி - ம்.) 24 ‘விதுப்புறு’ திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி. அவன் மக்கண்மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார்(பி - ம். எயிற்றியார்) பாடியது. (இ - ள்.) மடுத்தெழுந்த போரின்கட் கொன்ற மிகுதிபொருந்திய வலியமுயற்சியையுடைய வெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண் நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின், பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகிய சேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனே நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித் தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும் அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்; நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தை அவர்க்கொழிய யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீ அவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாக நின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்கு அரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல்வேண்டும், நல்வினையை; விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ - று. மற்று : அசை. தில் : விழைவின்கண் வந்தது. வானோருலகென்றது, ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது. வேந்தே! நின்மறனொழிக; ஆன்றவர் விருந்தெதிர்கொளற்கு நன்று செய்தல்வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயாக; நின்னுள்ளம் வாழ்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. செல்வமும் பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன. எஞ்சுதல் - இவர்க்குப்பின்னும் நிற்றல். தாணிழல் மயங்காதென்பதற்கு நினக்கு ஒருதீங்கும் வாராமலென்ற தாகக்கொள்க. இனி ‘அதனா லன்ன தாதலு மறிவோய்’ என்றதற்கு உயர்ந்தோருலகம் எய்துவது காரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து; அன்னதாதல் நீயறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்கு ஏமமாகும் நின் தாணிழலென முற்றாக்கி மயங்காது தெளிந்துநின்று நன்றுசெய்தல் வேண்டுமெனவும் உரைப்பாரும் உளர். ‘மாவெங் காட்சியொடு மாறெதிர்ந் தெழுந்தவர்’ என்று பாடம் ஓதுவாரும் உளர். |