392
மதியேர் வெண்குடை யதியர் கோமான்
கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியற்
பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
5ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ
உருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
10வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றனெ னாக வன்றே
ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
15நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்
தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்
கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
ஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை
விருந்திறை நல்கி யோனே யந்தரத்
20தரும்பெற லமிழ்த மன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே.

(பி - ம்.) 1. ‘உதியர்’ 6 ‘கடந்த’ 7 ‘குருதிபெரும்’ 8 ‘மார்பின’ 9 - 10 ‘பூட்டி.............வெள்ளை’ 11 ’வாழியபலவென’ 12 ’னின்ற னெனாதக’ 15 ‘யுண்ணென’ 17 ‘பொலங்கலத்தருள................விடுத்தல்’ 18 ‘ஊனமுறை’, ‘ஊழமுறை’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சிமகன் பொகுட்டெழினியை ஒளவையார்.


(கு - ரை.) 1. ஏர் - ஒப்பு ; “இலவம் போதே ரெழிற்றகைய சீறடிகள்” (சீவக. 1588)

2. கொடும்பூண் - வளைந்த ஆபரணம் ; “விளங்குமணிக் கொடும் பூண் விச்சிக் கோவே” (புறநா. 200 ; 8)

3. பசலைநிலவு - இளநிலவு.

5. கொடா - திறைகொடாத.

4 - 5. “பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண், இரும்பறை யிரவல” (புறநா. 263 : 1 - 2)

3 - 5. “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி” (புறநா. 394 : 6 - 7)

7. குருதிப்பெரும்பாட்டீரத்து - இரத்தப் பெருக்காலுளதாகிய ஈரத்தையுடைய.

8. களம் - தானியக்கதிரை அடிக்குங்களமும் போர்க்களமும்.

10. வெள்ளைவரகு - கவடி. கொள் - குடைவேல்.

6 - 10. பகைவருடைய அரண்களையழித்துக் கழுதையேரால் உழுது அந்நிலத்தில் வெள்ளைவரகும் கொள்ளும் வித்துதல் அரசர்க்கியல்பு.

9 - 11. “வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்” (புறநா. 15 : 2 - 3), “வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக், கவடி வித்திய கழுதையே ருழவன்” (சிலப். 27 : 225 - 6), “எழுதெழின் மாடத் திடனெலா நூறிக், கழுதையேர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின், வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற், கள்விரவு தாரான் கதம்” (பு. வெ. 120) “இடித்துவெளி செய்துநக ரெங்கணு நுழைந்தாங், கடுத்தமட வார்வயிறலைத்தன ரிரங்கக் கொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின், எடுத்துவரு வெள்வரகு கொள்ளுட னிறைத்து” (காஞ்சிப். நாட்டுப். 28) என்பவைகள் இவ்வடிகளோடு ஒப்பிடற்பாலன.

10 - 12. “இன்னும் துறையென்றதனானே புறத்தோன் கவடி வித்துதலும் தொகைநிலைப்பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க. அது, ‘மதியேர் வெண்குடை’ என்னும் புறப்பாட்டினுள் ‘வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும், வைக லுழவ வாழிய பெரிதெனச், சென்றியா னின்றனெ னாக’ எனவரும்” (தொல். புறத்திணை. சூ. 13, .)

13. பகட்டிலை - பெரிய இலை. “ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க, பாசி” (குறுந். 399)

14. சிதாஅர் - கந்தைத்துணி ; “துன்னற் சிதாஅர் துவர நீக்கி” (பொருந. 81)

13 - 4. புறநா. 390 - 13 ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4)

16. புறநா. 376 : 14, குறிப்புரை.

இவ்வடி, பொருந. 157 - 8-ஆம் அடிகளின் உரையில் மேற்கோளாக வந்துள்ளது.

17. கோள்மீன் - கோள்களாகிய மீன்களை ; சிறுபாண். 242 - 4.

18. கோள்முறை - கொள்ளும் முறை.

21. பிறங்கடை - வழித் தோன்றல் ; “படிகாத்தவர், பிறங்கடைப் பெரியோய்” (கம்ப. தாடகைவதை. 63)

20 - 21. “அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்” (புறநா. 99 : 2)

மு. இச்செய்யுள், கடைநிலையென்னுந்துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது தொல். புறத்திணை. சூ. 36. .

(392)