365
மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
5பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண்
10நிலமக ளழுத காஞ்சியும்
உண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே.

(பி - ம்.) 1 ‘கருவி விசுமபுதுகனக’ 2 ‘பெரிய’ 3 ‘வழியிடை’ 4 ‘குரட்டின’, ‘வயிரமணியாரததுப’ 5 ‘துருட்டிய’ 7 ‘சொல்லா’ 8 ‘விலைநற்’ 9 ‘உளனேவாழிய’, ‘வாழியனெனனப’ 11 ‘வுரைப்பருணாந்’

திணை - காஞ்சி; துறை - பெருங்காஞ்சி

மார்க்கண்டேயனார் (பி - ம். மாகணடயனார்)


(கு - ரை.) 1. கருவி - மின் முதலியவற்றின் தொகுதி.

2. இருசுடர் - சூரிய சந்திரர். 3. வளி - காற்று.

5. பொன்னந்திகிரி - சக்கரம் ; "பொன்னணி திகிரியஞ் செல்வன்" (சீவக.1203). தொல். குற்றியலுகரப். சூ.78, ந. மேற்.

6. பொருநர் - போர் செய்யும் பகைவரை. முன்பு - வலி.

7. முன்னோர் - முன்பு ஆண்ட அரசர்கள். செல்ல - வேறு உலகத்தை யடைய.

8. விலைநலப் பெண்டிர் - விலைமாதர்; பரத்தையர்.

9. பன்மாண் - பலகால்; கலித்.47 : 8.

10. காஞ்சி - நிலையின்மை.

"நிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும்" (சீவக.2221) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

மு. தொல். புறத்திணை. சூ. 23, ந. மேற்.

(365)