திணை - அது; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) முகில்சூழ்ந்த மலைக்குத் தலைவன், நாடோறும் பட்டம் முதலாகிய பூண்களையணிந்த யானையை இரப்போர்க்குக் கொடுக்கும் கதிர்விடுகின்ற பசும்பொன்னாற்செய்த அணியினையும் வளைந்த கடக மமைந்த முன்கையினையுமுடைய கொல்லும்போர் அமையாத ஆதன் ஓரியது மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு மிகவும் சென்றது எம்முடைய கூத்தச்சுற்றம்; அச்சுற்றத்தார் குளிர்ந்த நீரின்கட் பூவாத மணி மிடைந்த குவளைப்பூவை1 வெள்ளிநாரால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும் பிற அணிகலங்களையும் யானையணிகளுடனே பெற்றனராய் நீங்கிப் பசியாராகலானேகொல்லோதான், வாரால்வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதிகொண்ட இனிய இயங்கள் ஒலிப்ப ஆடுதலும் மாட்டாராயினார், தமது பாடுதலையும் மறந்து-எ - று.சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார் 2குடிமை ஆண்மைத்தொடக்கத்தன, நின்றாங்கே நின்று உயர்திணை முடிவும் பெறுதலின் இக்கடும்பென்பதும் பொருணோக்கால் முடிவு பெற்றது. கண்ணுளங்கடும்பென நின்றவழி, அம்: அல்வழிச்சாரியை. மன்: அசைநிலை. ஓரி வண்கொடை காணிய கண்ணுளங்கடும்பு சென்றது; சென்ற பின்றை அக்கடும்பாயினோர் தமது 1 பாடலும் மறந்து ஆடலும் ஒல்லாராயினார்: அதற்குக் காரணம் பசியாராகன் மாறுகொலெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘நுண்பூண்' என்று பாடமோதுவாரும் உளர். |