(கு - ரை.) 1. நொடுத்து - விற்று ; "வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள், வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள், யாண்டுகழி வெண்ணெ னிறைக்கு மூர", "அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள், சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்" (ஐங்குறு.48, 49) ‘நொடை - விலை ; மீனொடுத்து நெற்குவைஇ யென்றார் புறப்பாட்டினும்’(சிலப். 5 : 24, அடியார்.) 2. அம்பி - தோணி. மறுக்குந்து - மறுகச்செய்யும். 3. கறிமூடை - மிளகுபொதி ; "பொதிமூடைப் போரேறி" (பட்டினப்.137) 4. கலிச்சும்மைய - மிக்க முழக்கத்தையுடைய. கலக்குறுந்து - கலக்கும். 5. கலம் - கப்பல். பொன்பரிசத்தை. 6. தோணி - ஓடம். சேர்க்குந்து - சேர்க்கும். 7. தாரம் - பலபண்டம். 8. தலைப்பெய்து - கலந்து. 9. புனலங்கள்ளென்றது கள்ளின் மிகுதிபற்றி. குட்டுவன் - குட்டநாட்டையுடையவன் ; "போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ" (பதிற். 23 : 9) ‘பொன்’ என்பது ‘பொலம்’ என்று செய்யுட்கண் வருமென்பதற்குப் பொலந்தார்க் குட்டு்வனென்பது மேற்கோள் ; தொல்.புள்ளி. சூ. 61, ந. 10. முசுறி : சேரநாட்டிலுள்ளதோர் ஊர். 9 - 10. கள்ளினையுடைய முசுறி. 12. புரையர் - ஒத்தவர். வரையலள் - மணஞ்செய்யப்படாள் ; "நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென" (புறநா.345 ; 14) 14. வாய்ப்பட - வழிப்பட. ஏணி - மதிலிற் சார்த்தி ஏறுதற்குரியது ; எல்லையுமாம். 15 - 6. பருந்து உயிர்த்து இடைமதில் சேக்கும் - பருந்துகள் இடைமதிலில் தங்கி இளைப்பாறும் ; "பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை" "பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லில்" (மதுரைக். 231, 502) 17. "எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்" (புறநா. 178 ; 7) ; "மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்" (கலித். 31 ; 9) (343)
|