258
முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
5எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
10ஆதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.

(பி - ம்.) 1 ‘முதுகனியேய்ப்பத்’2 ‘தீங்கட்டாரம்’ 4 ‘பைச்சூன்’ 7 ‘வளவைபெருநிரை’10 ‘ஆத்தர’

திணையும் துறையும் அவை.

.......................உலோச்சனார் பாடியது.

உண்டாட்டாவது:-
‘’தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று” (பு. வெ. 15)

(இ - ள்.) முட்டாளையுடைய காரையினதுமுதிர்ந்த பழத்தையொப்ப முற்ற விளைந்த இனிய கந்தாரமென்னும்பெயரையுடைய மதுவையுடைய வேற்றுப்புலத்துத் தான்கொண்டுவந்துநிறுத்தின நிரையைக் கள்விலைக்கு நேராகக் கொடுத்துஉண்டு செவ்வித்தசையைத் தின்று செவ்விநிணமிக்கஎச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தேதிமிர்ந்து வேற்று நாட்டின்கட் புக்கானே, புல்லியதாடியையுடைய காளை; இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன்முன்னேபெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக்கொடுதருகுவன்; யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத்தொடுதலைப் பாதுகாத்துவைப்பாயாக, முதிர்ந்தமதுவையுடைய சாடியை; ஆவைக் கொண்டுவரக் கலந்ததூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன்விடாய்த்தலும் உண்டாம்-எ - று.

தலைச்சென்றென்பது, தலைச்செலவெனத்திரிக்கப்பட்டது. இதற்குக் கள்விலையாட்டியிடத்தேசெல்லவென்றுமாம்.
‘தீங்கட்டாரம்’ என்றோதிக் கள்ளாகிய இனியபண்டமெனினும் அமையும்.

‘காய்தலுமுண்டு’ என்பதற்குக்கள்வெய்யோனாகலின், நின்னை வெகுளவுங்கூடுமென்பாரும்உளர்.

இவன் நிரைகொள்ளச் செல்கின்றமைகண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது.


(கு - ரை.) 3. புறநா. 177: 14.

6. ஏழாம்வேற்றுமை வினையோடுமுடியும்வழித் திரிந்ததற்கும் (தொல். தொகை.சூ. 15, இளம். ந.), வேற்றுமைக்கண் மகரவொற்றுப்பகரம்வந்துழிக் கெடாது நின்றதற்கும் (தொல்.புள்ளிமயங்கு. சூ. 17, இளம். ந; இ. வி. சூ. 129,உரை) மேற்கோள்.

10. "கழுமிய துன்பமொடு கண்ணீருகுத்து” (மணி. 13: 18)

மு. ‘முட்காற் காரை......வெய்யோனே:இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது’ (தொல்.அகத்திணை. சூ. 54, ந.)

(258)